Skip to main content

காவல்துறை புகார் ஆணையம் அமைக்காததை எதிர்த்து ம.நீ.ம. வழக்கு!- தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 03/07/2020 | Edited on 03/07/2020

 

 Police Complaints Commission makkal needhi maiam chennai high court

 

காவல்துறையினருக்கு எதிரான புகார்களை விசாரிக்க,  உச்சநீதிமன்றம் வகுத்த வழிகாட்டுதல்களின் படி, 'காவல்துறை புகார் ஆணையம்' அமைக்கப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

போலீஸ் சித்ரவதை, லாக்- அப் மரணங்கள் போன்ற காவல்துறையினருக்கு எதிராக புகார்களைக் கொடுக்க,  அனைத்து மாநிலங்களிலும் 'காவல்துறை புகார் ஆணையம்' அமைக்க வேண்டும் என, பிரகாஷ் சிங் என்பவரது வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, காவல்துறையினருக்கு எதிராக புகார் அளிக்க மாநில அளவில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான புகார் ஆணையமும், மாவட்ட அளவில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையிலான புகார் ஆணையமும் அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

 

இதைத்தொடர்ந்து, கடந்த 2013- ஆம் ஆண்டு, தமிழகத்தில் 'காவல்துறை சீர்த்திருத்த அவசரச் சட்டம்‘ கொண்டு வரப்பட்டது. அதன்படி, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காவல்துறையினருக்கு எதிராக புகார்கள் அளிக்க மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் அமைக்கப்பட்ட ஆணையத்தில் நீதிபதிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. மாறாக, மாநில அளவிலான புகார் ஆணையத்திற்கு, உள்துறைச் செயலாளர் தலைமையில் டி.ஜி.பி மற்றும் ஏ.டிஜி.பி. ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். 

 

மாவட்ட அளவிலான புகார் ஆணையத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில், காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமைக்கப்பட்ட 'காவல்துறை சீர்த்திருத்த அவசரச் சட்ட' விதிகளை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி,  மக்கள் நீதி மய்யம் கட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச் செயலாளர் ஏ.ஜி.மவுரியா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

 

இந்த வழக்கு, இன்று (03/07/2020) நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் சாத்தான்குளம் சம்பவம் போல், மேலும் நடைபெறாமல் இருக்க உச்சநீதிமன்றம் வகுத்த வழிகாட்டுதல்களின்படி, 'காவல்துறை புகார் ஆணையம்' அமைக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில், இதே கோரிக்கைகளுடன் தொடரப்பட்ட வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்