Skip to main content

சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்; வசமாக சிக்கிய கஞ்சா கும்பல்!

Published on 02/03/2025 | Edited on 02/03/2025

 

Police arrest gang selling cannabis

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முக்கிய நகரங்கள் முதல் ஒரு சில கிராமங்கள் வரை  கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதை தடுக்கும் பொருட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரஜத்சதுர்வேதி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் கண்காணித்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் அருகே உள்ள நத்தம் கிராமத்தில் புளியந்தோப்பில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு   வாகனமும் அடையாளம் தெரியாதவர்கள் சிலரும் நிற்பதாக ரகசியத் தகவல் வந்தது. அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில்,  அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ், திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி, விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாயனூர் ராஜீவ் காந்தி,  கேரளா மாநிலம் கோழிக்கோடு ஷாஜி மற்றும் கிஷன் நந்து ஆகிய ஐந்து பேரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த இரண்டரை கிலோ கஞ்சா மற்றும் லோடு வாகனத்தையும் பறிமுதல் செய்து திருநாவலூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை செய்தனர்.

கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இச்சம்பங்களில் ஈடுபட்டு உள்ளதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  இவர்களுக்கு எங்கிருந்து கஞ்சா சப்ளை செய்யப்படுகிறது? வேறு எந்தெந்த மாவட்டங்களில் உள்ள குற்றவாளிகளுடன் தொடர்பு உள்ளது?. இவர்கள் மீது சம்பந்தப்பட்ட மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் ஏதேனும் வழக்கு உள்ளதா? என்ற கோணங்களில் விசாரணையை துரிதப்படுத்துமாறு தனிப்படையினருக்கு உத்தரவிட்டார்.  

உத்தரவின் பெயரில் தனிப்படை போலீசார் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் அவர்களுக்கே உரித்தான பாணியில் விசாரணை மேற்கொண்டதில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த  பிரேம் என்பவன் தங்களுக்கு கஞ்சா மொத்தமாக சப்ளை செய்வதாகவும், தங்களது தேவைக்கேற்ப கூறும் பொழுது நேரடியாகவும் சில இடங்களுக்கு அவனது கூட்டாளிகள் மூலமும் எடுத்து வந்து கொடுத்துச் செல்வார்கள் எனவும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட ஆனந்தராஜ் மூலம் பிரேமை செல்போனில் தொடர்பு கொள்ளச்செய்து தங்களுக்கு கஞ்சா மொத்தமாக தேவைப்படுவதாகவும் குறிப்பிட்ட தேதியையும், நேரத்திலும்  உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள ஆரிநத்தம் வனப்பகுதிக்கு வந்து கொடுக்குமாறு பேச வைத்தனர். அவனும்  திட்டமிட்டபடி சில தினங்களுக்கு முன்பு ஆனந்தராஜ் கேட்டதின் பேரில்  பிரேம் ஒரு அட்டைப் பெட்டியில்  30 கிலோ கஞ்சாவை பார்சல் செய்து கொண்டு 28ஆம் தேதி இரவு உளுந்தூர்பேட்டை அடுத்த ஆரிநத்தம் வனப்பகுதிக்கு வந்துள்ளான். அவனை ரகசியமாக கண்காணித்து வந்த தனிப்படை போலீசார்,  கஞ்சாவுடன் சுற்றி வளைத்து பிடித்தனர். 

முக்கிய குற்றவாளி கைதான தகவல் அறிந்த காவல் கண்காணிப்பாளர்  ரஜத்சதுர்வேதி நேரடியாக திருநாவலூர் காவல் நிலையம் சென்று பிடிபட்ட குற்றவாளிகளிடம் அவரே விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் பிரேம் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவன் என்பதும் ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவனை உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தனிப்படை போலீசார் சிறையில் அடைத்தனர்.

முன்பு கைதான ஐவரை இரண்டரை கிலோ கஞ்சா வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்து உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்