விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தரம்சந்த் நகரில் வசிப்பவர் ராஜேந்திரன் என்பவரது மகன் வினோத் (26). இவரை, கடந்த 28ஆம் தேதி தனியார் நிறுவனத்தில் வேலை முடித்துவிட்டு வெளியே வரும்போது ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கத்திமுனையில் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் 50 ஆயிரம் பணம் கொடுத்தால் உயிரோடு விட்டுவிடுவோம், இல்லையேல் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன வினோத், தான் பணிபுரியும் தனியார் கம்பெனி மேலாளருக்கு தகவல் தெரிவித்தார்.
அந்த மேலாளர் ரோசனை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். போலீசார் கடத்தல் கும்பலைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவந்த நிலையில், போலீஸ் தேடிவரும் தகவல் அறிந்த அந்த கும்பல் வினோத்தை நொளம்பூர் அருகே ஆட்டோவிலிருந்து இறக்கி விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்குப் பதிவுசெய்து கடத்தல்காரர்களைத் தேடிவந்தனர். இந்த நிலையில், திண்டிவனம் அருகே உள்ள சாரம் கிராமத்தைச் சேர்ந்த வசந்த், முருகன், கிருஷ்ணகாந்த் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ராஜசேகர் ஆகிய 4 பேரை போலீசார் விசாரித்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கடத்தலுக்குப் பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்துள்ளனர். இதில் தலைமறைவாக இருந்த அருள் என்பவரை ரோஷனை இன்ஸ்பெக்டர் பிருந்தா தலைமையிலான போலீசார் தேடிப் பிடித்து கைது செய்துள்ளனர். இளைஞரைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கும்பலைப் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் திண்டிவனம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.