பேஸ்புக் மூலம் காதல் வலைவிரித்து சுமார் 60 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளை ஆபாச படமெடுத்து பணம், நகை பறித்த மோசடி கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை பொள்ளாச்சியில் தனியார் கல்லூரி மாணவி ஒருவருக்கு பேஸ்புக் எனப்படும் முகநூலில் இருந்து திருநாவுக்கரசு என்ற இளைஞர் பிரண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்துள்ளார். அவரின் முகநூல் நட்பை அந்த கல்லூரி மாணவியும் ஏற்றுக்கொள்ள, தொடர்ந்து பேச ஆரம்பித்த திருநாவுக்கரசு அவனது ஸ்டைலான புகைப்படங்களை முகப்புத்தகத்தில் பதிவிட்டதன் மூலம் அந்த மாணவியை ஈர்த்துள்ளான். அவனை நம்பிய அந்த கல்லூரி மாணவி அவனுடன் மணி கணக்காக கண்விழித்து சாட்டிங் செய்துள்ளார்.
இந்த நட்பானது ஒருகட்டத்தில் தொலைபேசி எண்களை பரிமாறிக்கொள்ளும் அளவிற்கு செல்ல இருவரும் தொலைபேசியில் நாள்கணக்காக பேசியுள்ளனர். இது காலப்போக்கில் காதலாகவும் மாறியது. அதனையடுத்து திருநாவுக்கரசு அந்த கல்லூரி மாணவியிடம் தன்னிடம் சொகுசு கார் இருப்பதாகவும், வந்தால் பல இடங்களுக்கு சென்று வரலாம் என கூறியுள்ளான். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அந்த மாணவியும் ஆசை ஆசையாக தனது பேஸ்புக் காதலனை சந்திக்க சென்றுள்ளர். கண்ணாடியில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிய வாக்ஸ் வேகன் சொகுசு காரின் பின்புறத்தில் மாணவியும் திருநாவுக்கரசும் அமர முன்பக்கம் திருநாவுக்கரசின் நண்பர்கள் என இருவரும் உட்கார்ந்திருந்தனர்.
கார் செல்ல செல்ல அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளான் திருநாவுக்கரசு. அப்பொழுது முன் இருந்த நபர்கள் அதனை வீடியோ எடுத்துள்ளனர். கொஞ்சம் தாமதமாக சுதாரித்துக்கொண்ட மாணவி கூச்சலிட்டு கத்தியுள்ளார். காரிலேயே அந்த மாணவியை அந்த கும்பல் மிரட்ட, தான் என்னதான் செய்ய என கேட்டுள்ளார் அந்த மாணவி. முதலில் கழுத்தில் இருக்கும் தங்க செயினை கொடு என கேட்டு பறித்துக்கொண்ட அந்த கும்பல் கேட்கும்போது எல்லாம் பணம் தரவேண்டும் என மிரட்டிவிட்டு ஊஞ்சவேலன்பட்டி என்ற இடத்தில் நடு ரோட்டில் இறக்கிவிட்டு சென்றது.
அதனையடுத்து அடுத்த நாளே மீண்டும் தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்த மாணவியை மிரட்ட ஆரம்பித்தது அந்த கும்பல். இதனால் மனஉளைச்சல் அடைந்த அந்த மாணவி என்ன செய்வதென்று தெரியாமல் இறுதியில் தந்தையிடமே நடந்ததை கூறியுள்ளார். அந்த மாணவியின் தந்தை உடனே பொள்ளாச்சி காவல்நிலையத்தில் புகாரளிக்க உடனடியாக ஆக்சனில் இறங்கியது போலீஸ்.
ஏமாற்றிய அந்த நபரின் முகநூல் முகவரியை கொண்டு அந்த வழக்கில் சதீஷ், சபரீசன், வசந்தகுமார் என்ற மூன்று நபரை பிடித்து அவர்களிடம் மூன்று ஸ்மார்ட் போன்கள், ஒரு வாக்ஸ் வேகன் சொகுசு கார் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட போன்களை சோதித்ததில் சுமார் 200கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் அந்த மொபைலில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. 60 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளை முகபுத்தக்கம் மூலம் காதல்வலை வீசி காதலிப்பதாக கூறி நேரில் வரவைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டு அதனை படமெடுத்து அதை அவர்களிடமே காட்டி மீண்டும் உல்லாசம் அனுபவிப்பது மற்றும் பணம் கேட்டு மிரட்டுவது என தொடர் செயல்களில் ஈடுபட்டு வந்த அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.
இந்த மோசடியில் ஈடுப்பட்ட முதன்மை நபரான திருநாவுக்கரசை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். முன் பின் தெரியாத நபர்களின் நட்பை ஏற்றுக்கொள்ளும் பெண்கள் அவர்களுக்கு எவ்வளவு இடம் கொடுக்க வேண்டும் என்பதை மறந்தால் என்ன நிலை ஏற்படும் என்பதற்கு சான்றாக கோவையில் நடந்த இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் திக் திக் என பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.