Skip to main content

நக்கீரன் இணையச் செய்தி எதிரொலி; சிறுமி விவகாரத்தில் தொடர்புள்ளவர்கள் மீது போக்சோ வழக்கு

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

POCSO case against those involved in the girl's case!

 

‘சிறுமியிடம் பழகுவதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் கைது - சிவகாசி கொடுமை’ என்னும் தலைப்பில் கடந்த 5-ஆம் தேதி நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். நக்கீரன் இணையச் செய்தியின் எதிரொலியாக, சிறுமியின் தாயார் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவவீரர் வைரக்காளை உள்ளிட்டோர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. 

 

முதலில், அரிவாளால் வயிற்றில் கீறப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஓய்வுபெற்ற ராணுவவீரர் வைரக்காளை அளித்த புகாரின் பேரில், சிறுமியைத் திருமணம் செய்து தவறான வழியில் நடத்திய கணேசமணி, வைரமுத்து, செந்தில்குமார், சுடலைகுமார் ஆகியோர் மீது பிரிவு 397-ன் கீழ், சிவகாசி டவுண் காவல் நிலையத்தில் வழக்கு பதிவானது. போலீசார் விசாரணையில், இச்சம்பவத்தில் சிறுமியின் அம்மாவுக்கு தொடர்பு இருந்ததும், ராணுவவீரர் வைரக்காளையும் அச்சிறுமியுடன் பழகியதும் தெரியவர, இவ்விருவர் மீதும் போக்சோ வழக்கு பதிவாகியுள்ளது.  

 

என்ன நடந்தது?

 

சிவகாசி கவிதா நகரைச் சேர்ந்த சமையல் தொழிலாளி கணேசமணி, கோவில்பட்டியில் 11-ஆம் வகுப்பு படித்த சிறுமியுடன் free fire game மூலம் பழகினார். இவர்களது பெற்றோர் 4 ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் செய்யலாம் என்று கூறியிருக்கின்றனர். இந்நிலையில், சிறுமியின் அம்மா கணேசமணியின் அப்பாவிடம் வாங்கிய கடன் தொகை  ரூ.80 ஆயிரத்தை திருப்பித்தரவில்லை. இதனைத் தொடர்ந்து, கடந்த 18-3-2022  அன்று அச்சிறுமியைத் திருமணம் செய்திருக்கிறார் கணேசமணி. திருமணத்துக்குப் பிறகு, கணேசமணியும் சிறுமியும் பர்மா காலனி மற்றும் கவிதா நகர் ஆகிய இடங்களில் வசித்தனர். 

 

சிறுமியை கணேசமணியின் தந்தை தவறான வழியில் பயன்படுத்தியிருக்கிறார். அப்போது, சிறுமியுடன் பழகியவர்களை போட்டோ எடுத்து மிரட்டவும் செய்திருக்கிறார். ஓய்வுபெற்ற ராணுவவீரர் வைரக்காளை சிறுமியுடன் பழகியதையும் செல்போனில் படம்பிடித்து மிரட்டி பணம் கேட்டிருக்கிறார். அப்போதுதான் தகராறாகி, அரிவாளால் வயிற்றில் கீறல் ஏற்பட்டு வைரக்காளையின் குடல் சரிந்திருக்கிறது. 


தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி சிவகாசி மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்க, கணேசமணி, சுடலை, கணேசமணியின் தந்தை, சிறுமியின் தாய், ஓய்வுபெற்ற ராணுவவீரர் வைரக்காளை ஆகியோர் மீது போக்சோ வழக்கு பதிவாகியிருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்