பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்களைச் சந்தித்துத் தொடர்ந்து வாழ்த்து பெற்று வருகிறார். சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வரைச் சந்தித்த அவர், வைகோ, எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை தமிழக ஆளுநரைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார். இந்நிலையில் இன்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்து அவரிடம் வாழ்த்து பெற்றுள்ளார். அப்போது விஜயகாந்த்தின் மனைவியும் தேமுதிகவின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் உடனிருந்தார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அன்புமணி, " வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் பாமக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்பதை நான் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் நிச்சயம் எந்த மாற்றமும் இருக்காது என்ற உறுதியையும் உங்களிடம் அளிக்கிறேன்" என்றார். தனித்து ஆட்சி என்று பாமக கூறிவந்த நிலையில், தற்போது முதல் முறையாகக் கூட்டணி ஆட்சி என்ற வார்த்தையை அன்புமணி பயன்படுத்தியுள்ளதை அவரது கட்சியினர் வியப்பாகப் பார்க்கின்றனர்.