அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் முடிந்ததும் , வாட்ஸ் அப்பில் பரவிய ஒரு படத்தை எடப்பாடி பழனிசாமியிடம் காட்டி, அமைச்சர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அதிமுகவில் பரபரப்பாகியிருக்கிறது.
வன்னியர்கள் சமூக தலைவரான ராமசாமி படையாச்சியாருக்கு கடலூர் மாவட்டத்தில் மணிமண்டபத்தை அதிமுக அரசு அமைத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் மணிமண்டபம் திறப்பதாக இருந்தது. இடைத்தேர்தல் குறுக்கிட்டதால் திறப்பு விழா தள்ளிப்போனது. இந்த நிலையில், மணிமண்டபத்தை 25.11.2019 திங்கள்கிழமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கான அழைப்பிதழ் அச்சிடப்பட்டு, திறப்பு விழா தொடர்பான அறிவிப்பும் செய்யப்பட்டது.
வன்னியர் சமூக தலைவர் என்பதாலும், வன்னியர் சமூகத்தினரின் ஆதரவை பெறுவதற்காகவும், தானே நேரில் சென்று கலந்து கொண்டு மணிமண்டபத்தை திறந்து வைக்க வேண்டும் என்ற அளவுக்கு இந்த நிகழ்ச்சியை முக்கியமாக கருதுகிறார் எடப்பாடி பழனிசாமி.
பொதுவாக , மணிமண்டபம் திறந்த பின்னர்தான் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் மணிமண்டபத்திற்கு முன்பும் உள்ளேயும் அணுமதிக்கப்படுவார்கள். புகைப்படம் எடுக்கவும் அனுமதிக்கப்படுவர். இந்த நிலையில், பாமக தலைவர் ஜி.கே.மணியும் பாமக நிர்வாகிகளும் நேற்று தங்களது செல்வாக்கை பயன்படுத்தி ராமசாமி படையாச்சியாரின் மணிமண்டபத்தை நேற்று திறந்து , ராமசாமி படையாச்சியாரின் திருவுருவச் சிலைக்கு முன்பு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்தப் புகைப்படம் வாட்ஸ் அப்களில் பரவியது. அதிமுக பொதுக்குழு நடந்த நேரத்தில் இந்தப் புகைப்படம் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகளுக்கும் சென்றது. இது அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வாட்ஸ் அப்பில் வந்த புகைப்படத்தை எடப்பாடி பழனிசாமியிடம் காட்டிய அமைச்சர்கள், " மணிமண்டபம் திறப்பதற்கு முன்பே எப்படி இதுபோன்று புகைப்படங்கள் எடுக்கலாம்? பாமகவுக்கு மட்டும் சலுகை கொடுக்கப்பட்டிருக்கிறதா? இன்றைக்கே மணிமண்டப புகைப்படம் வெளியே வந்துவிட்டது . நாளைக்கு நீங்கள் அதனை திறந்து வைப்பதில் என்ன அர்த்தம் இருககிறது ? முக்கியத்துவம் இருக்கப் போகிறது ? அதிமுகவின் பவர் சென்டராக பாமக செயல்பட அனுமதித்திருக்கிறீர்களா ? மணிமண்டபத்தில் எப்படி அவர்கள் படம் எடுக்கலாம் ? மருத்துவமனையில் இருந்த ராமதாஸை நேரில் சந்தித்து மணிமண்டப திறப்பு விழாவுக்கான அழைப்பைக் கொடுத்தீர்கள். அத்துடன் நிறுத்தாமல் தைலாபுரம் தோட்டத்திற்கும் அமைச்சர்களை அணுப்பி பத்திரிகை முறைப்படி கொடுத்தீர்கள். அப்படியிருக்கும் போது உங்களுக்கான முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் அவர்கள் இப்படி செய்வது நியாயமா? " என்று தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.