இளநிலை பட்டப்படிப்பில் முதல் இரு இடங்களைப் பிடித்து பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 3100 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று பல்கலை மானியக்குழு அறிவித்துள்ளது.
யூனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர் ஸ்காலர்ஷிப்:
இளநிலை பட்டப்படிப்பில் பல்கலைக்கழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவர்களுக்காகவே இந்த ஸ்காலர்ஷிப் திட்டத்தை பல்கலைக்கழக மானியக்குழு கொண்டு வந்துள்ளது. இந்தியா முழுவதும் 3000 மாணவர்களுக்கு வழங்கப்படும். இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் பெற்றுள்ள ரேங்க் அடிப்படையில் உதவித்தொகை பெறுவதற்கு தேர்வு செய்யப்படுவர். அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைகளில் படித்த மாணவர்கள் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கு தகுதி உடையவர்கள். 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

நடப்புக்கல்வி ஆண்டில் முதுநிலை பட்டப்படிப்பில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்க வேண்டும். மாதம் ஒன்றுக்கு ரூ. 3100 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். தொலைநிலை முறையில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.
எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்:
தொழில்நுட்பப் படிப்புகளில் முதுநிலை பட்டப்படிப்பில் முதலாமாண்டு படிக்கும் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு தனியே ஸ்காலர்ஷிப் வழங்குகிறது. எம்ஏ., எம்எஸ்சி., எம்காம்., எம்எஸ்டபிள்யூ, இதழியல் படிப்புகளில் சேர்ந்திருப்போர் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்க முடியாது. மருத்துவயியல், பொறியியல், வேளாண்மையியல், சட்டவியல், மருந்தாளுநர் உள்ளிட்ட துறைகளில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள்.

எம்இ., எம்டெக்., படிக்கும் மாணவர்கள் மாதம் 7800 ரூபாயும், பிற துறைகளில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 4500 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படும். உதவித்தொகை பெற விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2019. மேலும் விவரங்களை, https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.