Skip to main content

கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை விசாரிக்க கோரி மனுத்தாக்கல் - இன்று பிற்பகல் விசாரணை!

Published on 03/09/2021 | Edited on 03/09/2021
jkl

 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா இருவரையும் விசாரிக்க கோரிய மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் இன்று (03.09.2021) பிற்பகல் விசாரணைக்குவருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரைக் கொலை செய்து, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக ஷோலூர் மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

இந்த வழக்கு தொடர்பாக, நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடந்துவருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி. முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சுனில் ஆகியோரை விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 

 

இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா இருவரையும் விசாரிக்க கோரிய மனு, நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் இன்று பிற்பகல் விசாரணைக்குவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்