Skip to main content

கார்த்தி சிதம்பரம் கைது; பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை - திருநாவுக்கரசு

Published on 28/02/2018 | Edited on 28/02/2018



ஐ.என்.எக்ஸ். நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டதாக குற்றம் சுமத்தி கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. போலீசார் கைது செய்திருப்பது அரசியல் உள்நோக்கமும், பழிவாங்கும் நோக்கமும் கொண்டதாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விசாரணைக்கு பலமுறை அவர் நேரில் சென்று ஆஜராகி இருந்தும் கூட, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று காரணம் கூறி, அவரது முன் ஜாமீன் மனு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது கைது செய்திருப்பது மத்திய பா.ஜ.க. அரசின் அரசியல் உள்நோக்கத்தோடும், பழிவாங்கும் போக்கோடும் நிகழ்ந்துள்ளது.

பா.ஜ.க. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி தினமும் தனது எழுத்தாலும், பேச்சாலும் விமர்சனம் செய்து வரும் முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரத்தின் குரலை தடுக்கவும், அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் உள்நோக்கத்தோடு மத்திய அரசு சி.பி.ஐ. அமைப்பை தவறாக பயன்படுத்தியிருக்கிறது. தினம் தினம் வெளிவரும் மத்திய பா.ஜ.க. அரசின் ஊழல்களை மறைக்கவும், பிரச்சினைகளை திசைத் திருப்பவும் இக்கைது நடவடிக்கை நிகழ்ந்துள்ளது.

கார்த்தி சிதம்பரம் குடும்பத்தினரை களங்கப்படுத்தவும், அச்சுறுத்தும் நோக்கத்துடனும் நிகழ்ந்துள்ள இக்கைதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்