Skip to main content

அரியலூரை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்... மாவட்ட ஆட்சியருக்கு மனு

Published on 20/01/2021 | Edited on 20/01/2021

 

Petition to the District Collector to declare Ariyalur as a National Disaster

 

அரியலூர் மாவட்டத்தைப் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து, விவசாய கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்து, வாழ்வாதாரம் காக்க நெற்பயிருக்கு ஏக்கருக்கு 50 ஆயிரம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்ய அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

 

அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநில தலைவர் தங்க சண்முகசுந்தரம் தலைமையில் வழங்கிய மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘டெல்டா பகுதியான அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் டி.பழூர் ஒன்றியம் மட்டுமல்லாமல் செந்துறை, ஆண்டிமடம், உடையார்பாளையம், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி என மாவட்டத்தில் பல பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிறு வகைகள், மக்காச்சோளப் பயிர்கள், கடலை, உளுந்து, கம்பு, கேழ்வரகு, சோளம், முந்திரி, முதலிய பயிர்கள் அனைத்தும் பல இலட்சக்கணக்கான ஏக்கர்கள் பாதிப்படைந்துள்ளன. மேலும் தொடர் கனமழையால் டி.பழூர், திருமானூர், செந்துறை, ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் பெய்த கனமழையால் அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

 

இதில் விவசாயிகளுக்கு நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்குவது என்பது ஏற்புடையதாக இல்லை. விவசாயிகள் பலர், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் அழுகிய நிலையில், மீண்டும் நடவு செய்து இரட்டிப்பு செலவு செய்துள்ளனர். எனவே ஏற்கெனவே பயிர்கள் அழுகி நஷ்டமடைந்த நிலையில் மீண்டும் நடவு செய்தும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதனையும் கணக்கில் கொண்டு அவர்களுக்கும் முறையான நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

 

எனவே வெயில், மழை, பனி, புயல், பேரிடர், வறட்சி என்று பல்வேறு சோதனைகளைக் கடந்து தொடர்ந்து விவசாயிகள் படும் துயரங்களைச் சொல்லி மாளாது. விதைச் செலவு, பயிர் நடவு, செலவு பயிர்கள், பராமரிப்புச் செலவு, உரச்செலவுகள், அறுவடைக் கூலி உயர்வு என பலவகைகளில் பாதிக்கப்பட்டும், விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் நிலையை உயர்த்துவதற்கு எந்தவித திட்டங்களும் இல்லாதது அனைத்து விவசாயிகள் மத்தியிலும் மன உளைச்சலுக்கு ஆளாவதுடன், தொடர்ந்து வாழ்வாதாரத்தை இழந்து கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருவது வருத்தமளிக்கின்ற செயலாகவே உள்ளது.

 

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்று கார்ப்பரேட் கம்பெனிகள் கோரிக்கை வைக்கும்போது, அரசு உடனடியாக களம் இறங்கி துயர்துடைக்க நடவடிக்கை எடுப்பது போல விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே விவசாயத்தை நம்பியுள்ள அனைத்து தொழில்களும் முடங்கும் பேரபாயம் உள்ளதையும் கருத்தில் கொண்டு, விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 50 ஆயிரம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும் என அனைத்து விவசாயிகள் சார்பில் அரியலூர் மாவட்ட ஆட்சியராகிய தங்களிடம் மனு அளிக்கின்றோம். 

 

மேலும் மிகுந்த வேதனையுடனும் மன உளைச்சலுடனும் விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் விவசாயிகள் பயிர் செய்த கடலை, உளுந்து, பருத்தி, மிளகாய், மல்லி பாரம்பரிய நெல் ரகங்கள் என அனைத்துமே இயற்கைப் பேரிடரால் பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது. டெல்டா பகுதிகளில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு, கஜா புயலை விட கடுமையான பாதிப்பு. எனவே தேசியப் பேரிடராக அறிவித்து டெல்டா விவசாயிகளின் துயரைத் துடைக்க, வங்கிகள் வாங்கிய கடனைக் கட்டுவதற்கு தரும் நெருக்கடியிலிருந்து விவசாயிகளைக் காப்பாற்றும் விதமாக உடனடி நடவடிக்கையாக விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் மூலம் அனைத்து விவசாயிகள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் அரியலூர் மாவட்டத்தைப் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து அனைத்து விவசாயிகள் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்; அனைத்து பயிர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்; நெற்பயிருக்கு ஏக்கருக்கு 50 ஆயிரம் வழங்கக் கோரி அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் தலைமையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகி வேலுமணி, வெற்றியூர் கிராம விவசாயிகள் சங்க நிர்வாகிகள் காமராஜ், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் அறங்கோட்டை இராமலிங்கம், சின்னநாகலூர் பெரியநாகலூர் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பாண்டித்துரை, பழனிச்சாமி, மேலவரப்பன்குறிச்சி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் லெட்சுமிகாந்தன், குரு கார்த்திக், தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி முடிகொண்டான் கணேசன், தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி செயலாளர் பிரகாஷ், தி.மு.க விவசாய அணி மனோகரன், மதிமுக விவசாய அணி சுதாகர் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் ஆகியோர் அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

மாவட்டம் விட்டு மாவட்டம் தாவும் சிறுத்தை; இரவு பகலாகத் தேடும் வனத்துறை - மிரட்சியில் மக்கள்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
People are afraid because of movement of leopards in Ariyalur

கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த செய்தியால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது. இதனையடுத்து, தற்போது அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதை பொதுமக்கள் நேரில் பார்த்துள்ளனர். இதனால் செந்துரையைச் சுற்றிலும் உள்ள கிராம மக்கள் பயத்திலும் அதிர்ச்சியிலும் தூக்கம் இன்றி தவிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம்(11.4.2024) இரவு செந்துறை அரசு மருத்துவமனை பகுதியில் சிறுத்தை புகுந்ததை பூங்கோதை என்ற பெண்மணி உட்பட சிலர் நேரில் பார்த்துள்ளனர். பயந்து மிரண்டு போன அவர்கள் உடனடியாக செந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக காவல்துறை தீயணைப்புத்துறை பொதுமக்களும் அங்கு திரண்டனர். காவல்துறையினர் மருத்துவமனை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மருத்துவமனை சாலையில் குறுக்கே சிறுத்தை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து சிறுத்தையைத் தேட தொடங்கினர்.

People are afraid because of movement of leopards in Ariyalur

அப்போது ஒரு வெல்டிங் பட்டறை அருகே சிறுத்தை பதுங்கி இருந்ததை இளைஞர்கள் கண்டனர். அவர்கள் சிறுத்தையை விரட்ட சிறுத்தை அங்கிருந்து ஏந்தல் என்ற ஏரிக்குள் பாய்ந்து சென்று மறைந்துள்ளது. பின்னர் இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். ஆனால் விடிய விடிய தேடியும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில், அந்தச் சிறுத்தை செந்துறை அருகில் உள்ள உஞ்சினி, பொன்பரப்பி, சிதலவாடி, பகுதிகளில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான முந்திரி காடுகளுக்குள் புகுந்து பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கோவை மாவட்டம் வால்பாறை மலை காடுகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட வனத்துறையினரை செந்துறை வரவழைத்தனர். அவர்கள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிவதில் நிபுணர்கள் என்று கூறப்படுகிறது.

People are afraid because of movement of leopards in Ariyalur

இதையடுத்து அரியலூர் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலமும் அப்பகுதியில் உள்ள ஓடை பகுதியில்  கண்காணித்ததோடு, சில இடங்களில் கூண்டு வைத்து அந்தக் கூண்டுக்குள் ஆடுகளை விட்டு சிறுத்தையை வரவழைத்து பிடிப்பதற்கு கடும் முயற்சி செய்து வருகின்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது செந்துறைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகியுள்ளது. நின்னையூர், பகுதியில் சிறுத்தையின் காலடித்தடம் பதிந்துள்ளது.

மேலும் செந்துறை பகுதியில் கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகி உள்ளது. மயிலாடுதுறை பகுதியில் நடமாடிய சிறுத்தை அங்கிருந்து காடுகள் அதை ஒட்டி உள்ள ஓடை பகுதிகள் வழியாக செந்துறை பகுதிக்கு வந்திருக்கலாம் என்றும், மேலும் அது அங்கிருந்து காடுகள் மற்றும் ஓடை வழியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பச்சை மலைக்கு செல்வதற்கான வாய்ப்பு உண்டு. அந்தச் சிறுத்தை இதுவரை விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளையோ நாய்களையோ அடித்து உணவாக சாப்பிட்டதாக தகவல் இல்லை. அதன் வழிப்போக்கில் கிடைக்கின்ற உணவை சாப்பிட்டு சென்று கொண்டிருக்கிறது.

சிறுத்தையை பிடிக்கும் பணியில் தஞ்சாவூர் ,கடலூர், பெரம்பலூர், அரியலூர், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள் கால்நடை மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிறோம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தச் சிறுத்தை நடமாட்ட அச்சத்தினால் செந்துறைப்பதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

People are afraid because of movement of leopards in Ariyalur

சிறுத்தை பிடிபடுமா? தப்பி செல்லுமா? என்று மக்கள் பதைபதைப்புடன் கிராமப்புறங்களில் பேசிக் கொள்கிறார்கள். இதனால் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட கிராமங்களில் மக்கள் நடமாட்டம் இரவு நேரங்களில் குறைந்து காணப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தல் பரபரப்பு ஒரு பக்கம், சிறுத்தை நடமாட்டத்தினால் ஏற்பட்ட பரபரப்பு மறுபக்கம் என மக்கள் மிரண்டு போய் கிடக்கிறார்கள்.