
கணவரைக் கொன்று 15 துண்டுகளாக வெட்டி டிரம்மில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம், மீரட் பகுதியைச் சேர்ந்தவர் சவுரப் ராஜ்புட் (29). வணிக கப்பல் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்த இவருக்கும், ஜோதி (27, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.
தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாட அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த சவுரப் ராஜ்புட் கடந்த 4ஆம் தேதி காணாமல் போனதாக அவரது பெற்றோர் போலீஸுக்கு புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சவுரப் ராஜ்புட்டின் மனைவி ஜோதியிடம் போலீசார் விசாரணை நடத்தவே, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதில் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதில், பல திடுக்கிடும் தகவல் வெளியாகின.
ஜோதிக்கும், சவுரப் ராஜ்புட்டின் நண்பரான சாஹில் (25) என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் சவுரப்புக்கு தெரியவர, தனது மனைவி ஜோதியை கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், அவர்கள் இருவரும் தனித்தனியே வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையே, பணிக்காக சவுரப் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாட அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த சவுரப்பை கொலை செய்ய ஜோதியும் சாஹிலும் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, கடந்த 4ஆம் தேதி சவுரப்புக்கு கொடுத்த உணவில் தூக்கு மாத்திரை கலந்து கொடுத்துள்ளனர். அதனை சாப்பிட்ட சவுரப்பும் மயங்கி தூங்கிவிட்டார். அதன் பிறகு, ஜோதியும் சாஹிலும் கூர்மையான ஆயுதத்தை பயன்படுத்தி சவுரப் ராஜ்புட்டை கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். அதன் பின்னர், சவுரப்பின் உடலை 15 துண்டுகளாக வெட்டி வீட்டில் இருந்த டிரம்மில் போட்டுள்ளனர். மேலும், அதில் சிமெண்ட் கலவையை கொட்டி டிரம்மை மூடியுள்ளனர். அதன் பின்னர், ஜோதியும் சாஹிலும் சிம்லாவுக்குச் சென்று திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, சவுரப்பின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஜோதியையும், சாஹிலையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.