கடந்த ஜனவரி 14- ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971- ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்றதாகவும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் பேசினார்.

இந்த கருத்துக்கு தமிழகத்தில் கடும் கண்டனங்கள் எழுந்து வந்தன. அது மட்டும் இல்லாமல் பெரியார் பற்றி பொய்யான தகவலைப் பரப்பி பெரியாரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்குடன் வதந்தி பரப்பும் வகையிலும், பொது அமைதியைக் குலைக்கும் வகையிலும் ரஜினி பேசியதாக பல காவல்நிலையங்களில் ரஜினி மீது வழக்கும் தொடரப்பட்டன. பெரியார் ஆதரவாளர்கள் ரஜினிக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். இதற்கிடையில் ரஜினிக்கு ஆதரவாக பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் கருத்து தெரிவித்தன.
இந்த பிரச்சனை தமிழகத்தில் புகைந்து கொண்டிருக்க, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சாலவாக்கம் பகுதியில் இருந்த பெரியார் சிலை இன்று உடைக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பெரியாரின் கை மற்றும் முகம் முதலிய பாகங்கள் வெள்ளைத் துணியால் கட்டப்பட்டுள்ளது. அவற்றை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளைச் சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பெரியார் சிலையை சேதப்படுத்திய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.