கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் தண்ணீர்முக்கம் எனும் கிராமப் பஞ்சாயத்தில் ஒரு நூதன உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் அந்தக் கிராமத்தில் வீட்டை விட்டு பொருட்கள் வாங்க வெளியே வரும் மக்கள் கட்டாயம் குடைபிடித்து தான் வர வேண்டும் என்பதே. இருவர் குடைபிடித்து அருகில் நின்றாலும் விரித்த குடையின் விட்டத்தின் அளவுக்கு இடைவெளி விட்டுதான் நிற்க முடியும். மேலும் விரித்த குடையுடன் ஒருவர் அருகில் இன்னொருவர் உரசிக்கொண்டு நிற்க வாய்ப்பே இல்லை. சமூக இடைவெளியை முறையாகக் கடைப்பிடிக்க இந்த உத்தரவை அந்தப் பஞ்சாயத்து பிறப்பித்துள்ளது. இதற்கு ஏதுவாக மலிவு விலையில் குடைகள் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. வெயிலுக்குக் குடைபிடித்தது போல, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் இக்குடை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
கேரளாவை போன்றே பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க வெளியில் வரும்போது வாட்டும் வெயிலிருந்து தற்காத்து கொள்ளவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் விதமாகவும் குடைபிடித்து கொண்டு பொருட்களை வாங்கும் முறையை கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் காவல்துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். நெல்லிக்குப்பம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா இம்முறையைத் தொடங்கி வைத்து, பொது மக்கள் இதைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், முகக் கவசமும் அணிய வேண்டும் எனவும், குடைபிடிக்காமல், முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொருட்களை வியாபாரிகள் வழங்கக் கூடாது எனவும் அறிவுறுத்தினார். மேலும் இந்த நடைமுறையைப் பின்பற்றாத கடை உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிந்து கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்தார்.
இதைப்பற்றி கூறிய வணிகர்கள், “நாங்கள் தினசரி மக்களிடையே எவ்வளவு கூறினாலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கூட்டம் கூட்டமாக நெறித்துக் கொண்டு வருகிறார்கள். இப்போது இந்தப் புதுமையான முறையால் குடைபிடித்து நின்று பொருள் வாங்குகின்றனர். இதனால், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தமுறை மிகவும் வரவேற்கத்தக்கது. எங்களுக்கும் ஒரு டென்சன் குறைந்தது” என்றனர்.