கோவையில் பனிமூட்டம் போல படர்ந்த கழிவு பஞ்சுகளில் இருந்து பாதுகாத்து கொள்ள வீட்டிற்குள்லேயே முடங்கிய பொதுமக்கள், பங்கஜா மில்லில் இருந்து வெளியேறி பஞ்சுகள் குடியிருப்புகளில் படிவதை அரசு அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை ராமநாதபுரம் பகுதியில் பங்கஜா பஞ்சாலை இயங்கி வருகிறது. தேசிய பஞ்சாலை கழகத்தின் கீழ் இயங்கும் இந்த பஞ்சாலையில் 500 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 5 நாட்களாக பங்கஜா பஞ்சாலையில் இருந்து இரவு நேரத்தில் கழிவு பஞ்சு காற்றில் கலந்து வெளியேறியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக பெரியார் நகர் பகுதியில் சாலைகள், வீடுகள், மரங்கள் என எங்கும் பஞ்சு படிந்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி படர்ந்திருப்பதுடன், வீட்டில் உள்ள தண்ணீர், உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றிலும் படிந்துள்ளது எத்தனை முறை சுத்தம் செய்தாலும் பஞ்சு வீடுகளில் படிவதை தடுக்கமுடியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் பஞ்சாலையில் இருந்து வெளியேறிய கழிவு பஞ்சு காற்றில் கலந்து வருவதால் சுவாசிக்க சிரம்மாக இருப்பதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் போல பஞ்சு சாலைகளில் படர்ந்திருந்ததாகவும், பஞ்சு முகத்தில் அடிப்பதால் வீட்டை பூட்டி வெளியே வராமல் இருப்பதாகவும் அப்பகுதி பெண்கள் கூறுகின்றனர்.
இதனால் முகமூடி அணிந்து வெளியே செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும், குழந்தைகள் விளையாட செல்லாமல் வீட்டிற்குள் முடங்கியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக ஆலை நிர்வாகத்திடம் முறையீட்டால் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் உடனடியாக கழிவு பஞ்சு பஞ்சாலையில் இருந்து வெளியேறி குடியிருப்புகளுக்கு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.