தமிழ்நாடு முழுவதும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசின் சார்பில் வரும் செவ்வாய் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாளுக்கு தமிழ்நாடு முழுவதிலுமிருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் துவங்கினர். கடந்த 12 ஆம் தேதி முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தினசரி இயக்கப்படும் 6300 பேருந்துகளுடன் பொங்கல் திருநாளுக்காக 4449 பேருந்துகள் சென்னையிலிருந்தும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து 6182 பேருந்துகள் என மொத்தமாக 16,932 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மறுபுறம் தனியார் பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து ரயில்களிலும் தங்களது சொந்த வாகனங்களிலும் சொந்த ஊர்களை நோக்கி பயணம் சென்றனர். ஒட்டுமொத்தமாக சென்னையிலிருந்து மட்டும் 8 லட்சம் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.