ஜெயங்கொண்டம் மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த கதிரவன் என்ற கொளஞ்சியை தேசதுரோக வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர், சீர்காழி பகுதிகளில் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை முழுமையாக அமல்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது மத்திய அரசு. இத்திட்டத்திற்கு எதிராக அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும், ஜனநாயக சக்திகளும் போராடி வருகின்றனர்.
கடலூர், ஜெயங்கொண்டம் பகுதியில் இப்பிரச்சினையைக் கையில் எடுத்துப் போராட அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரு போராட்ட முன்னணியை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த அடிப்படையில் கடந்த 20/06/2018 அன்று மக்கள் அதிகாரம், சி.பி.எம்., சி.பி.ஐ., ஒ.வி.மு., ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒருங்கிணைப்புக் கமிட்டி உருவாக்குவது பற்றி பேசியுள்ளனர். அதில் மஃப்டியில் கலந்து கொண்ட போலீசார், அந்நிகழ்வுக்குப் பிறகு ஒருங்கிணைப்புக் கமிட்டியைச் சேர்ந்த பிரதிநிதிகளிடம் இப்போராட்டக் கூட்டமைப்பில் இருந்து மக்கள் அதிகாரத்தை வெளியேற்றுமாறு மிரட்டியிருக்கிறது. அதற்கு அவர்கள் மறுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த போலீஸ், கடந்த 22/06/2018 அன்று மதியம் தனது வீட்டில் குழந்தைகளுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த கொளஞ்சியை, 10-க்கும் மேற்பட்ட போலீஸ் சூழந்து கொண்டு சாப்பிட்டு முடிக்கக்கூட விடாமல், கையோடு இழுத்துச் சென்றுள்ளது. “ஓ.என்.ஜி.சி.-க்கு எதிராக நோட்டீஸ் கொடுத்தார், இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினார்” எனக் கூறி அவர்மீது, இந்திய தண்டனைச் சட்டம் 153 A, 124 A, ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் போலீசார் அடைத்துள்ளனர் என்று மக்கள் அதிகாரம் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.