தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதேபோல் மயிலாடுதுறையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாகக்கூறி செயற்பொறியாளர் அலுவலகத்தைப் பொதுமக்களும் விவசாயிகளும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரத்தில் மின்தடை ஏற்படுவதாக மின்வாரிய அலுவலகத்தில் மீது கல்வீசி தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஆரணி மின்வாரிய அலுவலர் ஆரணி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி புகார் அளித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக கவலை தெரிவிக்கும் அய்யனார் நகர் பொதுமக்கள் பர்மா காலனி சந்திப்பில் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டம் ஈடுபட்டனர். போராட்டத்தைக் கைவிடுமாறு போலீசார் அறிவுறுத்திய நிலையில், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், இதேபோல் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட இடங்களிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.