வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது. இந்த புயல் காரணமாகத் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது. அதனைத் தொடர்ந்து தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ள பாபட்லாவிற்கு அருகே தீவிரப் புயலாக நேற்று (05.12.2023) மாலை 4 மணியளவில் மிக்ஜாம் புயல் கரையைக் கடந்தது.
புயல் காரணமாக மூன்றாவது நாளாக பெய்த மழைநீர் இன்றும் சென்னையில் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அசோக் நகர், அரும்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அசோக் நகரில் பாரதிதாசன் காலனி உள் பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். அதிகளவு பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார்.
ஆய்வுக்கு பிறகு அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளில் ஆவின் விற்பனையகங்களில் ஆய்வு மேற்கொண்டேன். பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பதற்றம் அடைந்து அன்றாட தேவையை விட அதிக பால் பாக்கெட்டுகளை வாங்கி மக்கள் இருப்பு வைக்க வேண்டாம். சென்னையில் பல்வேறு பகுதியில் உள்ள ஆவின் பால் விற்பனையகங்களில் நிலைமை சீரடைந்து வருகிறது. அம்பத்தூர் பால் பண்ணையில் வெள்ளம் வடிந்து சீரடையாத காரணத்தால் அங்கிருந்து விநியோகிக்கப்படும் பகுதிகளில் சிறிது காலதாமதம் ஏற்படலாம்' என தெரிவித்துள்ளார்.