சென்னை விமான நிலையத்தில் இன்று (06.11.2024) ஒரே நாளில், 4 ஏர் இந்தியா ஏக்ஸ்பிரஸ் விமானங்களின் சேவைகள் முன்னறிவிப்பின்றி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது இதனால் விமான பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். விமானங்களை இயக்குவதற்கு விமானிகள் மற்றும் துணை விமானிகள் போதிய அளவில் இல்லாததால் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதாவது சென்னையில் விமான நிலையத்திலிருந்து இன்று மாலை 06:10 மணிக்கு கௌகாத்திக்கு செல்ல வேண்டிய விமானம், இரவு 10:40 மணிக்கு கொல்கத்தா செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் இன்று மாலை 05.30 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னை வர வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இரவு 10:05க்கு கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய விமானங்கள் என 4 விமானங்களின் சேவைகள் ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனையடுத்து விமானம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து பயணிகள் விமான நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதே சமயம் நிர்வாகக் காரணங்களால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.