அரசு பள்ளிகளில் 16549 பகுதிநேர ஆசிரியர்கள் ரூபாய் 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளில் ரூபாய் 2700 மட்டுமே சம்பளத்தை உயர்த்தி கொடுக்கப்பட்டுள்ளது. 9வது ஆண்டு தொடங்கிய நிலையில் தற்போது பணிபுரியும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி கருணை மனுக்களை அரசுக்கு அனுப்பி வருகின்றனர். ஏழ்மை நிலையில் உள்ள 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் வாழ்வாதாரம் மேம்பட சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என அரசுக்கு அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களையும் காலமுறை ஊதியத்தில் பணிநிரந்தரம் செய்ய வேண்டி கவன ஈர்ப்பு கூட்டங்களை தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக இன்று கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் சங்க மாநில மையத்தில் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் கடலூர் மாவட்ட தலைவர் பாக்கியராஜ் முன்னிலை வகித்தார். மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சத்யராஜ் வரவேற்புரை ஆற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை ஏற்று சிறப்புறையாற்றினார்.
கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தின் கல்வி மானிய கோரிக்கை நாளில் ஊதிய உயர்வுடன் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களையும் காலமுறை ஊதியத்தில் பணிநிரந்தரம் செய்யவேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் இயற்றப்பட்டது. இக்கூட்டத்தில் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் செங்குட்டுவன், கர்ணன், ராஜா மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ராஜ்மோகன், மயூரவேலன், புனிதா, கனிமொழி, மோகன்ராஜ், பிரகாஷ், வேல்முருகன், மணிக்கண்ணன், திலீப்குமார், தண்டபாணி, அலெக்சாண்டர், வெங்கடேசன், சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் மாரிமுத்து நன்றி கூறினார்.