Skip to main content

மந்திரி பெயரில் மோசடி செய்ய முயன்றவருக்கு போலீஸ் வலை...

Published on 16/08/2020 | Edited on 17/08/2020
police

 

 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், வயது 48. இவர் தொழில்துறை அமைச்சர் சம்பத்தின் உதவியாளராக உள்ளார். இவருக்கு கடந்த 4ஆம் தேதி கடலூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனி நிர்வாக இயக்குனரின் உதவியாளர் எனக் கூறிக்கொண்டு ஒருவர் தொடர்பு கொண்டு, அமைச்சர் சம்பத் கரோனா நோய் தடுப்புக்காக திட்டக்குடி பகுதிக்கு வழங்குவதற்காக 50 ஆயிரம் முக கவசங்கள் அமைச்சர் கேட்டிருந்தார். அவை தயாராக உள்ளது என்று கூறியுள்ளார். உடனே அமைச்சரின் பிஏ செந்தில்குமார் அமைச்சர் யாரிடமும் முக கவசம் கேட்கவில்லையே என்று கூறியுள்ளார்.

 

இதையடுத்து முக கவசம் சம்பந்தமாக தங்களிடம் தொடர்பு கொண்ட நபரின் தொலைபேசி எண்ணை அந்த நபர் செந்தில்குமாரிடம் கொடுத்துள்ளார். அந்த எண்ணுக்கு செந்தில்குமார் தொடர்பு கொண்டு பேசியபோது, அந்த எண்ணிலிருந்து பேசியவர் அமைச்சர் சம்பத் பேசுவதாக கூறியுள்ளார். அவரிடம் செந்தில்குமார் இது அமைச்சர் குரல் இல்லையே என கூறியதற்கு, நீங்கள் யார் என்று எதிர்முனையில் பேசியவர் கேட்டுள்ளார்.

 

அதற்கு செந்தில்குமார் நான்தான் அமைச்சர் உதவியாளர் பேசுகிறேன் என கூறியதும் அந்த நபர் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதே மர்ம நபர் நெல்லிக்குப்பம் சர்க்கரை மற்றும் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஆகிய இடங்களிலும் அமைச்சர் பேசுவதாக கூறி, 50 ஆயிரம் முககவசம் வாங்கி தரும்படி கேட்டு மிரட்டியுள்ளார். இது குறித்து அமைச்சர் சம்பத்தின் உதவியாளர் செந்தில் குமார் நேற்று முன்தினம் மாவட்ட எஸ்.பி. அபினவ்விடம் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் வழக்குப்பதிவு செய்து அமைச்சர் பெயரை கூறி மோசடியில் ஈடுபட முயன்ற அந்த மர்ம நபரை தேடி வருகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்