பள்ளி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாவதைத் தடுக்க, ஒவ்வொரு பள்ளியும் காவல்துறையினர் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சேலம் மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா கூறினார்.
பள்ளி மாணவர்களிடையே போதைப் பொருள் ஒழிப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம், சேலம் லைன்மேடு செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், வியாழக்கிழமை (ஆக. 4) நடந்தது. சேலம் மாநகர காவல்துறை இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா பேசுகையில், ''பள்ளி மாணவ, மாணவிகளிடையே போதைப் பழக்கத்தை ஒழிக்க, பள்ளிகளுக்கு அருகில் குட்கா, ஹான்ஸ், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதைக் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மாநகரில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாவதை தடுக்க, அந்தந்த பகுதிகளில் உள்ள காவல்நிலையங்கள் மூலம் கண்காணித்து வரப்படுகிறது. இது போன்ற தொடர் நடவடிக்கையால் தற்போது மாணவர்களிடையே போதைப் பழக்கம் குறைந்துள்ளது. இதை முற்றிலும் ஒழிக்க, ஆசிரியர்களும் மாணவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என்றார்.
மாநகர காவல்துறை துணை ஆணையர்கள் லாவண்யா, மாடசாமி ஆகியோரும் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு விழிப்புணர்வு குறித்து பேசினர். சேலம் மாநகரில் உள்ள அனைத்து அரசு, மாநகராட்சி, சுயநிதி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.