தமிழக சட்டப்பேரவை இன்று இரண்டாவது நாளாக கூடியது. இதில் மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கலைஞர், மருத்துவர் ஜெயச்சந்திரன் மற்றும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் 2018-ல் கஜா புயலால் உயிரிழந்தோருக்கு பேரவையில் இரங்கல் மற்றும் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதில் முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கலைஞருக்கு இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்து பேரவை முன்னவர் ஓ. பன்னீர்செல்வம், 'அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கலைஞரின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை. பன்முகத்தன்மை கொண்ட கலைஞர், பேரறிஞர் அண்ணாவின் அன்பு தம்பி. அரசியல் எல்லையை கடந்து எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் கலைஞர் மீது அன்பு கொண்டிருந்தனர். இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவரான கலைஞர் சமூக நீதிக்காக போராடியவர். சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் தேசியக்கொடி ஏற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர் கலைஞர். இலக்கியம், கவிதை என அனைத்திலும் சிறப்பாக பங்காற்றியவர் கலைஞர்" என்று புகழாரம் சூட்டினார். மேலும் பன்னீர்செல்வத்தை ஒரு முறை பச்சை தமிழன் பன்னீர் என்று முரசொலியில் வந்ததையும் நினைவுகூர்ந்தார்.