/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2314.jpg)
சேலத்தில், பெண் மருத்துவரை வேலைக்குச் செல்லக்கூடாது என வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக, காதல் கணவர் மீது இளம்பெண் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் தாதம்பட்டியைச் சேர்ந்தவர் மவுலியா (26). மருத்துவர். கடந்த ஆண்டு நாமக்கல் மாவட்டம் காந்திபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் சந்தோஷ் குமரன் (27) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். திருமணத்திற்குப் பிறகு, சேலம் அஸ்தம்பட்டி நீதிமன்ற சாலையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர். இவர்கள் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றுகின்றனர்.
கணவன், மனைவி இருவருமே மத்திய அரசுப் பணியில் சேர முயற்சித்து வந்த நிலையில், அண்மையில் ஒரு நேர்காணல் நடந்தது. அதில், மவுலியா தேர்வு பெற்றார். இவருடைய கணவர், நேர்காணலில் தேர்வு செய்யப்படவில்லை. மனைவிக்கு மட்டும் மத்திய அரசுப்பணி கிடைத்ததால், கணவருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் மவுலியாவை, மத்திய அரசுப்பணிக்குச் செல்லக்கூடாது எனத்தடுத்து வந்ததோடு, அவரை வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாகவும்கூறப்படுகிறது.
இதுகுறித்து மவுலியா, சேலம் அம்மாபேட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், ''தனது கணவர் தன்னை வேலைக்குச் செல்ல விடாமல் வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி வருவதாகவும், அவருடைய நண்பர் கணேஷ் என்பவர் உடந்தையாக இருப்பதாகவும், தன்னை சாதி பெயரைச் சொல்லி திட்டுகிறார்,'' என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் குறித்து, காவல் ஆய்வாளர் சிவகாமி, மவுலியாவின் கணவர் சந்தோஷ்குமரன், அவருடைய நண்பர் கணேஷ் ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.
இந்த புகார் குறித்து காவல்துறை உதவி ஆணையர் சரவணகுமார் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)