கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் விரைவில் நலம் பெற இறைவனைப் பிரார்த்திப்பதாகத் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். வசந்தகுமார் (70), கடந்த மாதம் முதல் சென்னையில் தங்கி கட்சிப் பணி மற்றும் வியாபார பணிகளைக் கவனித்து வந்தார். இந்நிலையில் எம்.பி. வசந்தகுமார் மற்றும் அவரது மனைவி தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிவித்தார். இந்நிலையில், வசந்தகுமார் விரைவில் நலம் பெற எனத் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், "கரோனா தொற்று தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.H.வசந்தகுமார் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று மீண்டுவர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.