
பாஜகவினர் சார்பில் மதுபான கடைகளில் ‘அப்பாவின் அரசு டாஸ்மாக் கடை’ என்ற வாசகத்துடன் தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலினின் புகைப்படத்தை ஒட்டும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் ஆங்காங்கே கைது செய்யப்பட்டும் வருகின்றனர். இதற்கு திமுகவினர் சார்பில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பாஜகவினரின் போராட்டத்தை கண்டித்து தமிழக பாஜக தலைவரின் புகைப்படத்தை பொதுக்கழிவறை கட்டிடத்தில் ஒட்டும் போராட்டத்தை திமுகவின் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் சாலையில் இருக்கும் பொதுக் கழிப்பிட கட்டிடத்தில், பாஜக மாநில தலைவரின் ஃபோட்டோ பிரின்ட் செய்யப்பட்ட போஸ்டரை 180-வது வட்ட திமுகவினர் ஒட்டினர். அத்துடன், மாநில தலைவருக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுக் கழிப்பிடத்தில் மாநில தலைவரின் போஸ்டரை ஒட்டும் செய்தியறிந்து, திருவான்மியூர் பகுதி பாஜகவினர் ஓடோடி வந்து, ஒட்டப்பட்ட போஸ்டரை கிழித்தெறிந்தனர். அதனை திமுகவினர் தடுக்க முயற்சித்தனர். இதனாலும் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே போஸ்டர் ஒட்டிய திமுகவினர் மீது, திருவான்மியூர் காவல் நிலையத்தில் திருவான்மியூர் மண்டல பாஜக தலைவர் பாலு புகார் கொடுத்திருக்கிறார்.
திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே நடக்கும் இந்த போஸ்டர் யுத்தம், அரசியல் களத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.