
தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு உட்பட தென்மாநிலங்கள் பாதிக்கப்படுவது குறித்து விவாதித்து சில முடிவுகளை எடுப்பதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ,கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், பஞ்சாப் முதல்வர் பகவத் மான் மற்றும் பிற மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அக்கட்சிகளின் பிரதிநிதிகள் பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர், ''நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவது என்பது அல்லது நமது பிரதிநிதித்துவம் குறைவது என்பதை நம்முடைய அரசியல் வலிமை குறைவதாகத்தான் பார்க்க வேண்டும். இது வெறும் எண்ணிக்கை பற்றியது மட்டுமல்ல, இது நம்முடைய அதிகாரம்; நமது உரிமைகள்; நமது எதிர்காலத்தில் நலன்கள் பற்றியது. பிரதிநிதித்துவம் குறைந்து வருவதால் நமது மாநிலங்கள் நமக்கு தேவையான நிதி பெறுவதற்கு கூட போராடும் நிலை வரும்.

நமது விருப்பம் இல்லாமல் நமக்கு எதிரான சட்டங்கள் வடிவமைக்கப்படும். நமது மக்களை பாதிக்கும் முடிவுகள் நம்மை அறியாதவர்களால் எடுக்கப்படும். பெண்கள் அதிகாரம் அடைவதில் பின்னடைவுகளை சந்திப்பார்கள். மாணவர்கள் முக்கிய வாய்ப்புகளை இழப்பார்கள். உழவர்கள் ஆதரவின்றி பின் தங்குவார்கள். நமது பண்பாட்டு அடையாள முன்னேற்றம் ஆபத்தை சந்திக்கும். காலம் காலமாக நாம் போற்றி பாதுகாத்து வரும் சமூக நீதி பாதிக்கப்படும். குறிப்பாக பட்டியலின பழங்குடியினர் மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். தொகுதிகள் எண்ணிக்கை குறைப்பதை அனுமதித்தாலோ அல்லது நமது மாநில பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைத்தாலோ நமது சொந்த நாட்டில் நாம் அரசியல் அதிகாரம் இழந்த குடிமக்களாக மாறும் அபாயம் ஏற்படும். எனவேதான் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை சாதாரணமாக கருதக் கூடாது என்று சொல்கிறேன். இன்னொன்றையும் நான் தெளிவாக சொல்கிறேன் ஜனநாயக பிரதிநித்துவத்தை வலுப்படுத்தும் எந்த நடவடிக்கையும் நாம் எதிர்க்கவில்லை. ஆனால் அந்த நடவடிக்கை நியாயமானதாக அரசியல் பிரதிநித்துவத்தை பாதிக்கக் கூடாது என்று தான் சொல்கிறோம்''என்றார்.