முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்களின் விடுதலைக்காக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், மாநில அளவில் மக்கள் சந்திப்பு பயணத்தை நடத்தி வருகிறார். நெல்லையிலும் அற்புதம்மாளின் மக்கள் சந்திப்பு நடந்தது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அற்புதம்மாள் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது நடை தளர்ந்திருந்தார்...
28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் 7 பேர்களையும் விடுதலை செய்வதற்கு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, தமிழக அரசு முறையாக, அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுத்தது. அரசு தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி 150 நாட்களாகி விட்டது. அவர் அதில் கையெழுத்துப் போடாமல் உள்ளார். சட்டப்படி இதில் வேறு ஒன்றும் செய்ய முடியாது என்பதால் ஏழுபேர்களின் விடுதலைக்காக மக்கள் சந்திப்பு நடத்துவது என முடிவெடுத்து ஊர் ஊராகச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறேன். கவர்னர் ஏழு பேர் விடுதலைக்குக் கையெழுத்திட்டவுடன் எனது பயணம் நிறைவு பெறும். இதில் சிலர், ஒன்றுகூடி நம் பலத்தைக் காட்டுவோம் என்கின்றனர். இதற்காகச் சிறை செல்லக் கூடத் தயார் என சில இளைஞர்கள் சொல்கிறார்கள். ஆனால் 7 பேர்களின் விடுதலைதான் முக்கியம் என்பதால் மக்களின் கருத்துக்களைத் திரட்டி வருகிறேன். மக்களின் உணர்வுகளை மதித்து கவர்னர் கையெழுத்திட வேண்டும். 7 பேர் விடுதலையை தமிழகமும் எதிர்பார்ப்பில் உள்ளது. அதனால், இனிமேல் நாங்கள் நீதிமன்றம் செல்லப் போவதில்லை. மேலும், நளினி முருகன் பட்டினிப் போராட்டம் நடத்துவது அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது. என வேதனை மண்டச் சொன்னார் அற்புதம்மாள்.