Skip to main content

ஆன்லைன் ரம்மியால் இளைஞர் தற்கொலை; சகோதரி கதறல்

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

online game incident in chennai suresh

 

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில்  ஆன்லைன் ரம்மி விளையாட்டால் 16 லட்சம் ரூபாயை இழந்த ஒருவர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். கடந்த வெள்ளியன்று வீட்டிலிருந்து வெளியே சென்ற சுரேஷ் வீடு திரும்பவில்லை. சுரேஷின் மனைவி கே.கே.நகர் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்திருந்தார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 16 லட்சம் ரூபாயை இழந்ததால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்கிற ரீதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மெரினா கடற்கரையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அது சுரேஷின் உடல் என்பது தெரியவந்தது. மேலும் அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றும் போலீசாருக்கு கிடைத்தது. அதில் 'காலில் மண்டியிட்டு கேட்கிறேன் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தயவு செய்து தடை விதிக்க வேண்டும்' என உருக்கமாக எழுதி இருந்தார்.

 

online game incident in chennai suresh

சுரேஷின் அக்கா தனலட்சுமி செய்தியாளர்களிடம் பேசுகையில், " என்னுடைய தம்பியின் உயிர் ஆன்லைன் ரம்மியால் போய் உள்ளது. சுரேஷ் சிறிய அளவில் தொழில் செய்து வந்தார். ஆறாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு படிக்கும் இரு ஆண் குழந்தைகள் சுரேஷுக்கு உள்ளனர். வயதான பெற்றோர்களை தவிக்க விட்டுச் சென்று விட்டான். ஆன்லைன் ரம்மி மூலம் ஏற்படும் உயிரிழப்பு என்பது எங்களோடு போகட்டும். இதனால் சுரேஷின் குடும்பம் நடு வீதிக்கு வந்துள்ளது. அடுத்தவர்களின் குடும்பம் நடுத் தெருவிற்கு வருவதற்குள் ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள்.

 

சுரேஷ் கடிதத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளதை நிறைவேற்றுங்கள் என வலியுறுத்துகிறேன். சுரேஷ் ஆன்லைன் ரம்மி விளையாடுவது குடும்பத்திற்கு தெரியாது.  மும்பையிலிருந்து மனைவியின் அக்காவிடம் இருந்து பணத்தை பெற்று ஆன்லைன் ரம்மி  விளையாடி அதன் மூலம் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார். மேலும் மனைவியின் நகைகளை அடமானம் வைத்து விளையாடி உள்ளார். கடந்த நான்கு ஐந்து மாதங்கள் வரை தொடர்ந்து விளையாடி இழந்துள்ளார். எங்களிடம் இதுகுறித்து எதுவும் சொல்லவில்லை. குடும்பத்தையே நடுத் தெருவில் விட்டுச் சென்றுவிட்டார். பணத்தை இழந்து விட்டால் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால் இன்று சுரேஷ் தனது உயிரை இழந்துவிட்டான். அதனை எப்படி மீட்க முடியும்" என்று கதறுகிறார். 

 

 

சார்ந்த செய்திகள்