கடலில் மீன்களைப் பிடித்தபிறகு அதனை அனைத்து மக்களுக்கும் எளிய முறையில் மீன்களைக் கொண்டு சேர்க்கும் பணியில் மீனவப்பெண்கள் பெரும்பான்மையாக ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் வாழ்வாதரம், பொருளாதரம் மேம்படும் வகையில் கை கணினி மூலம் இணையவழிக்கல்வி அளிப்பது மீனவப்பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
பெண்கள் சந்திக்கும் பல்வேறு வகையான பிரச்சனைகளுக்கு இணைய வழியில் தீர்வு காண எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மீன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் மீனவ பெண்களுக்கு கை கணினியை கொண்டு இணையவழி கல்வி மூலம் மீன்பதப்படுத்துதல் தொழிலை மேம்பாடு அடைய செய்யும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் மீனவ பெண்களுக்கான இணையக்கல்வி, டிஜிட்டல் முறையை பயன்படுத்தி மீன் தரமேம்பாடு மற்றும் விற்பனை திறன்கள் வளர்த்தல், அவர்களுடைய நம்பிக்கையையும், சமூக ஆதரவுகளையும் வளர்ப்பது மற்றும் விற்பனையை மையமாகக் கொண்ட ஆக்கப்பூர்வமான டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் உருவாக்குவது போன்றவை இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.
தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 6 கடலோர மாவட்டங்களில் (நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், இராமநாதபுரம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி) 100 கிராமங்களை சேர்ந்த 6 ஆயிரம் மீனவப் பெண்களுக்கு இணையக்கல்வி - இன்டர்நெட், கூகிள் பே , இணையத்தில் கணக்கு தொடங்குவது, இணையத்தை பயன்டுத்தி பணப்பரிமாற்றம் செய்வது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்தெடுக்கப்பட்ட மீனவ பெண்கள் சுய உதவிக்குழுகளுக்கான டிஜிட்டல் கருவிகள் (கைகனிணி), மீன் தர மேம்பாடு மற்றும் மேலாண்மை, மீன் உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய இணைய வழி கல்வி, மீன் மற்றும் வணிக மேம்பாடு தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய பெண்களுக்கான பிரத்யேக ஹெல்ப் லைன் வசதிகள்.
மீன் பதப்படுத்துதல் மற்றும் வணிக மேம்பாடு தொடர்பான செய்திகளை அவர்களுக்கு கொண்டுசேர்க்க ஒலிவடிவ குறுஞ்செய்திகள் அனுப்புதல், மீன்பிடி பதப்படுத்துதல் மற்றும் அவற்றை மேம்படுத்துவதற்கான கருத்துகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள பிரத்யேக ஆண்ட்ராய்டு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மீன் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான ஆன்லைன் இணையதளம் போன்ற திட்டங்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில கடலோர கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து எம்.எஸ் சாமிநாதன் பவுன்டேசன் நிறுவனத்தின் மீன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் தலைவரும், திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான சி.வேல்விழி கூறுகையில், மீன்களை ஆண்கள் பிடித்த பிறகு அதனை எளிய மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையை மீனவ பெண்கள் தான் செய்து வருகிறார்கள். மற்ற வணிக கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்தும் டிஜிட்டல் முறையில் வணிகம் நடைபெறுகிறது. ஆனால், மீன் மார்க்கெட் மற்றும் தெருக்களில் மீன் விற்கும் பெண்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லை. அவர்களுக்கு உள்ள கல்வி அறிவை கொண்டு எளிய முறையில் இந்த திட்டத்தை தொடங்கி கை கணினி மூலம் செயல்படுத்தி வருகிறோம். இந்த பயிற்சியில் பள்ளிக்கு செல்லாத மீனவப்பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொள்கிறார்கள்.
கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் இதுவரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 1600 மீனவப்பெண்களுக்கு இணையக்கல்வி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடலூர் மாவட்டத்தில் சின்னவாய்க்கால், கலைஞர் நகர், எம்ஜிஆர் நகர்,குமரப்பேட்டை, டிஎஸ் பேட்டை, சோனங்குப்பம், சி.புதுப்பேட்டை, சி.புதுக்குப்பம், மடவாப்பள்ளம், சாமியார்பேட்டை, வேளங்கிராயன்பேட்டை, கடலூர் முதுநகர் பகுதியில் உள்ள கோரி, புதுநகர் ஆகிய 14 கிராமங்களை சேர்ந்த 421 பெண்களுக்கு தற்போதுள்ள கால சூழலுக்கு ஏற்றவாறு கை கணினியைக்கொண்டு டிஜிட்டல் முறையில் இணையக்கல்வி வழங்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியின் மூலம் மீனவ பெண்களின் வாழ்வாதரம் பாதுகாக்கப்படும், பொருளாதார மேம்பாடு ஏற்படும் என்பது உறுதி என்கிறார். மீனையும், கருவாட்டையும் கையெலெடுத்த பெண்களுக்கு கை கனிணி மூலம் இணையவழிக்கல்வி அளிப்பது வரவேற்பை பெற்றுள்ளது.