பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, ரெகாப் இந்தியா பவுண்டேஷன், ரெகாப் பவுண்டேஷன், கேம்பஸ் ஃபிரண்ட் ஆப் இந்தியா, அனைத்திந்திய இமாம் கவுன்சில், தேசிய மனித உரிமைகள் கூட்டமைப்பு, தேசிய மகளிர் ஃபிரண்ட், ஜூனியர் ஃபிரண்ட் ஆகிய இயக்கங்களுக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. அதேபோல் எம்பவர் இந்தியா பவுண்டேஷன் அமைப்புக்கும் 5 ஆண்டுகள் தடைவிதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது. மேலும் அவ்வமைப்பின் டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களையும் முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த தடை குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ''இந்த நாட்டில் தடைசெய்யப்பட வேண்டிய ஒரு இயக்கம் இருக்கிறதென்றால் அது ஆர்.எஸ்.எஸ் இயக்கம்தான். ஆனால் அது அதிகாரத்திற்கு வந்த திமிரில் ஜனநாயக ஆற்றல்களை அடக்கி ஒடுக்க நினைக்கிறது. தடை செய்யப்பட்டிருக்கலாம் (பிஃஎப்இ) ஆனால் மாற்று பெயரில், வேறு அமைப்பில் நாம் இயங்க வேண்டும். ஏனெனில் இந்த எதிர்ப்பு நாம் எதிர்பார்த்தது தான். பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா வட மாநிலங்களில் படிக்கமுடியாத, தாழ்த்தப்பட்ட மக்கள் பல்லாயிரம் பேரை படிக்க வைத்துள்ளது. ஒருநாள் ஆர்.எஸ்.எஸ் இந்த நாட்டை விட்டு ஓடும் காலம் வரும். இங்கு மதத்தை தாண்டிய புனிதம் ஒன்று இருக்கிறது. அதுதான் மனிதம்'' என்றார்.