ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த அய்யம்பாளையம், உழவன் நகரைச் சேர்ந்தவர் செல்வம் (59). அவரது மனைவி தேவி. செல்வம் மனைவி, மகள் பேரன் பேத்தியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் செல்வத்துக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி மது அருந்துவதால் அவருக்கு நெஞ்சு வலியும் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று செல்வம் மது அருந்தப் பணம் கேட்டுள்ளார். பணம் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பணம் கொடுக்கவில்லை என்றால் செத்து விடுவேன் என்று கூறிக்கொண்டு தோட்டத்திற்குச் சென்றார். ஆனால் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் தோட்டத்திற்குச் சென்று பார்த்த போது செல்வம் தான் மதுவில் களைக்கொல்லி மருந்தைக் கலக்கிக் குடித்து விட்டதாகக் கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்ததற்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் செல்வம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.