தேனி லோக்சபா, பெரியகுளம் சட்டசபை (தனி) தொகுதி வடுகபட்டி சங்கரநாராயணன் நடுநிலைப்பள்ளியில் 197 வது ஓட்டுச்சாவடி உள்ளது. இங்கு ஓட்டுப்பதிவு துவங்கிய ஒரு மணிநேரத்தில் 63 ஓட்டுக்கள் பதிவானது. திடீரென வாக்குப்பதிவு இயந்திரம் பழுதால் ஓட்டுப்பதிவு தடைபட்டது. பின்பு சரி செய்ய மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்காததால் 2 மணிநேரத்திற்கு பின் புதிய இயந்திரம் கொண்டுவரப்டட்டது. ஆனால் ஏற்கனவே பதிவான 63 ஓட்டுக்களை எவ்வாறு கணக்கிடுவது என்ற பிரச்னை எழுந்தது. ஓட்டளித்தவர்களை வரவழைத்து மீண்டும் ஓட்டளிக்க வைப்பது என்ற ஒருமித்த கருத்துக்கு அணைத்து கட்சி பூத் ஏஜென்ட்டுகளும் சம்மதித்தனர்.ஓட்டு போட்டு சென்றவர்களை கட்சியினர் தேடி, தேடி சென்று 46 பேரை ஓட்டளிக்க வைத்தனர்.
இதில் 17 பேரை மீண்டும் அழைத்து வர முடியவில்லை. பதிவு செய்த 63 ஓட்டுகளுடன் மாலை வரை 904 ஓட்டுகள் பதிவாகி இருந்தது. ஓட்டுப்பதிவு முடியும் நேரம் வரை அந்த 17 பேரும் வராததால் அதிகாரிகள் எவ்வாறு கணக்கை சரி செய்வது என புலம்பிக்கொண்டிருந்தனர்.இதனையடுத்து பூத் ஏஜென்ட்டுகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 17 ஓட்டுக்களை முக்கிய கட்சிகளுக்கு பகிர்ந்து கொள்ள ஏஜென்டுகளை கேட்டுள்ளனர் இதற்கு பூத் ஏஜென்ட்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் எந்த கட்சிக்கும் ஓட்டுகள் வேண்டாம் என்றால் 17 ஓட்டுக்களை பதிவு செய்தால்தான் கணக்கை முடிக்க இயலும் என கூறி உள்ளார் ஓட்டுச்சாவடி அலுவலர்.பின்பு ஏஜென்ட்டுகள் சம்மதத்துடன் 17 ஓட்டுக்களையும் 'நோட்டா'விற்கு போட்டுள்ளார்.தேர்தல் முடிந்து ஓரிரு நாட்களுக்கு பின் இந்த தகவல் வெளியானது. அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மறு ஓட்டுப்பதிவிற்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.