கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பீகார், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் தங்கி, பீங்கான் தொழிற்பேட்டை மற்றும் பிற பகுதிகளில் வேலை செய்து வருகின்றனர். அன்றாட பணிக்கு செல்லும் அவர்கள் தற்போது மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கால் எவ்வித வேலைக்கும் செல்ல முடியாமல், உணவிற்காக தவித்து வருவதாக கூறுகின்றனர். இந்நிலையில் தங்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்.
அதையடுத்து வட மாநிலங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் பெயர் பட்டியல் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களை ஊருக்கு ரயில் மூலம் அனுப்புவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் நேற்று (13.05.2020) விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த வடமாநில தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதையடுத்து வட்டாட்சியர் கவியரசு சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
வடமாநில தொழிலாளர்களை அவரவர் மாநிலத்திற்கு அனுப்புவதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என்றும், விரைவில் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்படுவார்கள், அதுவரை அமைதியாக இருக்க வேண்டும். உணவு தொடர்ந்து வழங்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.