தென்னக ரயில்வே உதவி ரயில் ஓட்டுநர் பணிக்கு உ.பி. கோரக்பூரைச் சேர்ந்த பலர் தேர்வாகியிருப்பது பொதுத்தளத்தில் பெரும் விவாதமாகிவருகிறது. இந்நிலையில், இதனைக் கண்டித்தும் தென்மாநில விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்ய வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று (30.09.2021) தென்னக ரயில்வே பொதுமேலாளரிடம் மனு அளித்தனர்.
சென்னை சென்ட்ரலில் உள்ள தென்னக ரயில்வே பொதுமேலாளரைச் சந்தித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், ‘தென்னக ரயில்வே உதவி ரயில் ஓட்டுநர் காலிப் பணியிடங்களுக்கு, தென்னக ரயில்வே வாரியத் தேர்வில் (ஆர்.ஆர்.பி.) பங்கேற்றோருக்கு பணி வழங்குவதற்குப் பதிலாக உ.பி. கோரக்பூரில் தேர்வானவர்களை நியமித்ததை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் தென்மாநில விண்ணப்பதாரர்களை உடனடியாக ரயில் ஓட்டுனர் பணியிடங்களில் நியமிக்க வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.