![hc](http://image.nakkheeran.in/cdn/farfuture/7rgYI9OQe1aRyI_g4Ly7CDjHoWA4jwlrOHTJFxJch3w/1533724020/sites/default/files/inline-images/high-court.jpg)
மறைந்த திமுக தலைவர் கலைஞரை மெரினாவில் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்ய தமிழக அரசிடம் திமுக சார்பில் அனுமதி கோரப்பட்டது. அனுமதி மறுக்கப்படவே, உயர்நீதிமன்றத்தில் அனுமதி அளிக்க கோரி அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணையில்,
கலைஞரே எனது வாழ்க்கை மற்றும் ஆன்மா என அண்ணாதுரையே கூறியுள்ளார். இறந்தவர்களுக்கு மரியாதை செய்வது மிக முக்கியம். 65 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றியவர் கலைஞர் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். கிண்டியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள தலைவர்களின் சிந்தந்தம் வேறு. கொள்கை, சித்தாந்த ரீதியானவர்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்வது தான் சரியாக இருக்கும். காந்தி மண்டபம் அருகே கலைஞரை அடக்கம் செய்வது கண்ணியமானதாக இருக்காது. மெரினாவில் அண்ணா சமாதி அமைந்துள்ள பகுதி நினைவிடம் அமைக்க அனுமதிக்கப்பட்ட பகுதி, வழக்குகள் தள்ளுபடியால் மெரினாவில் இடம் ஒதுக்க தடையில்லை என திமுக தனது வாதத்தை வைத்தது.
கலைஞர் பின்பற்றிய விதிகளுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. உணர்வுகளின் அடிப்படையில் வழக்கு தொடர முடியாது. அண்ணா சமாதியில் இடம் கேட்ட வழக்கில் அரசு மீது குற்றம்சாட்ட எந்த முகாந்திரமும் இல்லை என்று அரசு தரப்பு வாதிட்டது.
இதையடுத்து நீதிபதிகள், சட்ட சிக்கல், வழக்கு நிலுவையில் உள்ளன என்றீர்கள். ஆனால் இப்போது எதுவும் இல்லை. கலைஞருக்கு இடம் ஒதுக்க சட்ட சிக்கல் இருப்பதாக சொல்லிவிட்டு அதற்கு முரணாக வாதிடுகிறீர்களே என்றனர்.
உடனே, வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதால் அரசின் முடிவு செல்லாது என எடுத்துக்கொள்ள முடியாது என்று அரசு வாதிட்டது.
இதன் பின்னர் நீதிபதிகள், காமராஜருக்கு மெரினாவில் இடம் வழங்கவேண்டும் என்று யாரும் கோரிக்கை வைக்கவில்லை. முதல்வர், முன்னாள் முதல்வர் குறித்த நெறிமுறைகளை இந்த வழக்கில் ஏற்றுக்கொள்ள முடியாது. முதல்வர்களை மட்டுமே மெரினாவில் அடக்கம் செய்யலாம் என விதிகளில் இல்லை என தெரிவித்தனர்.