Skip to main content

புயல் சேதங்களை ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்திய குழு!

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

nivar cyclone union government committee visit tamilnadu and puducherry

 

 

'நிவர்' புயல் காரணமாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பயிர்கள் நீரில் மூழ்கிய நிலையில், வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு சென்று புயல் சேதங்களை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புயல் சேதங்களை கணக்கீடு செய்து, இழப்பீடுகளை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையைப் பெற்று தரவும் உத்தரவிட்டுள்ளார். 

 

புதுச்சேரி மாநிலத்திலும் 'நிவர்' புயலால் 1,400 ஹெக்டேர் பயிர்கள், மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 285 ஹெக்டேர் பரப்பளவில் வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளது. 7000 ஹெக்டேர் விளை நிலங்களுக்கு அரசே ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 425 வீதம் பயிர் காப்பீடு செய்துள்ளது என அம்மாநில அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். 

 

இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'நிவர்' புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக முதல்வரிடம் தெரிவித்தார். 

 

இந்நிலையில் திங்கட்கிழமை (30/11/2020) அன்று தமிழகம் வரும் மத்திய குழு டிசம்பர் 1- ஆம் தேதி 'நிவர்' புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளது. தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் புயல் சேதத்தை ஆய்வு செய்ய உள்ளது மத்திய குழு. 

 

ஆய்வுக்கு பின்னர் சேத விவரங்களைக் கணக்கிடும் மத்தியக் குழு மத்திய அரசிடம் அறிக்கையை அளிக்கும். மத்திய குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்