கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்றார்.
அப்போது புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் முன்பு பேசிய அவர், நகரப்புறமாக இருந்தாலும், கிராமப்புறமாக இருந்தாலும் புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் குறித்து சம்மந்தப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு கொடுங்கள். மத்திய, மாநில அரசுகளிடம் கலெக்டர் அதனை தெரிவிப்பார். தேவையான உதவிகள் கிடைக்க மத்திய அரசு ஒத்துழைக்கும்.
தென்னை விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் எவ்வளவு தென்னங்கன்றுகள் விழுந்துள்ளது, வாழைகள் விழுந்துள்ளது என்பதை கணக்கெடுத்து கலெக்டரிடம் மனு கொடுங்கள். விழுந்த மரங்களை அகற்றுவதற்கு முதலில் நடவடிக்கை எடுப்பார்கள். தென்னை, வாழை மரங்களின் சேதத்தை பார்க்க வேளாண்துறை குழு தமிழுகம் வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் போதிய தென்னங்கன்றுகள் இல்லையெனில் பிறமாநிலங்களில் இருந்து எடுத்துவர நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் அந்தமானில் இருந்தும் தென்னங்கன்றுகளை வரவழைக்க ஏற்பாடு செய்யப்படும். தென்னை வளர்ந்து காய் காய்க்கும் வரை விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் பருப்பு போன்ற பயிற்களை வைக்க அதிகாரிகள் உதவி செய்வார்கள். தென்னை, வாழை, வீடு பற்றி உங்களிடம் சொல்லியிருக்கிறேன்.
மின்சாரம் இன்னும் நம்ம வீட்டுக்கு வரவில்லை. மாநில அரசு முயற்சி செய்கிறது. இல்லையென்று சொல்லவில்லை. நேற்று நாகப்பட்டிணத்தில் மின்சாத்துறை அமைச்சரை பார்த்தேன். முயற்சி செய்துகொண்டிருக்கிறோம் என்றார்.
அதுவரை மக்களுக்கு தேவையான கெரசின் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். மின்சாரம் வரும்வரை தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவைகளெல்லாம் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள். நாளடைவில் நிறைய விஷயங்கள் செய்ய வேண்டியுள்ளது. அவைகள் பிரதமர் மூலமாகவே நடைபெறும்.
மத்திய அரசு மூலமாகத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். இடைக்காலத்தில் கிடைக்க வேண்டிய உதவிகள், நீண்ட நாட்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்கும் என்று சொல்லத்தான் வந்திருக்கிறேன்.
இந்தப் பகுதி மக்கள் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது. நான்கு, ஐந்து மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுப்படையாக நாம் சொன்னது தஞ்சாவூர். இங்கிருந்து சோழர்கள் எங்கெல்லாமோ போய் பிரகதீஸ்வரர் கோவில் போன்று பெரிய பெரிய கோவில்களை கட்டியுள்னர். கம்போடியாவில், இந்தோனேஷியாவில் கட்டியிருக்கிறார்கள். இங்கிருந்து சென்றவர்கள்தான்.
இங்கிருந்துதான் நாடு முழுக்க தேவையான அரிசியை அனுப்பி வைத்திருக்கிறீர்கள். தஞ்சாவூர்தான் நம்ம நாட்டுக்கே களஞ்சியம். அப்படிப்பட்ட இந்த பகுதிக்கு பெயர், புகழ் வாங்கிக்கொடுத்த நீங்கள் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது.
கேளுங்க. கேள்வி கேளுங்க. ஏன் வரலன்னு கேளுங்க. நீங்கள் கஷ்டத்தில் இருக்கும்போது எப்படி பேசினாலும் நாங்க தப்பா எடுத்துக்கொள்ள மாட்டோம். நிச்சயமாக உங்களுக்கு உதவி செய்ய மத்திய அரசு இருக்கிறது. மாநில அரசும் எங்களுக்கு ஒத்துழைக்கிறது. இந்த கஷ்ட நேரத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் மனசு கசிந்து பேச வேண்டாம். மனசு வேதனைப்பட வேண்டாம். தைரியமாக இருங்கள். உதவி கண்டிப்பாக உங்களை தேடி வரும். நீங்க கேட்கும் உதவி வரும். தைரியமாக இருங்கள். நம்பிக்கையை இழக்க வேண்டாம்.
விவசாய காப்பீடு திட்டம். அதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும். நாளைக்குள் கட்ட முடியாது என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மாநில அரசுக்கு ஒரு ஆலோசனை சொன்னேன். எத்தனை விவசாயிகள் கட்ட முடியாமல் இருக்கிறார்களோ, அவர்களுக்கு மாநில அரசே அதற்கான தொகையை கட்டிவிட்டு, பின்னர் இழப்பீட்டு தொகை வரும்போது அந்த தொகையை கழித்துவிட்டு கொடுத்துவிடுங்கள். அதனைவிட்டு ஏன் அவர்களை அலைய விடுகிறீர்கள் என்று சொன்னேன். மாநில அரசு அதனை செய்ய வேண்டும். நாங்களும் மத்திய அரசிடம், விவசாயிகளுக்கான தொகையை சீக்கிரம் கொடுங்கள் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு கூறினார்.