Skip to main content

என்ஐஏ சோதனை; சாட்டை துரைமுருகன் வீட்டில் இருந்து ஆவணங்கள் பறிமுதல்!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
 NIA Documents seized from the house of Chattai Duraimurugan

சென்னை, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, கோவை, தென்காசி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள்  இன்று சோதனையில் ஈடுபட்டனர். பிற நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பினர் ஊடுருவல் செய்தனரா எனவும், வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றனரா என்ற சந்தேகத்திலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் மூலம் என்ஐஏ அதிகாரிகள் தங்களுக்குத் தேவையான ஆவணங்களை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.

அந்த வகையில் திருச்சி சண்முகா நகரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் இருக்கும் சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையின் போது சாட்டை துரை முருகனின் மனைவி மாதரசியிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து மாதரசியிடம் சாட்டை துரைமுருகன் பிப்ரவரி 7 ஆம் தேதி ஆஜராக வேண்டும் எனக் கூறி சம்மனை கொடுத்துவிட்டு சென்றனர். இந்த சோதனையின் போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாவும் கூறப்படுகிறது. அதே போன்று சிவகங்கையில் தென்னகம் என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த விஷ்ணு பிரதாப் என்பவர் வீட்டிலும் நடைபெற்ற என்ஐஏ சோதனையும் நிறைவடைந்துள்ளது. அவரது வீட்டில் இருந்து செல்போன் மற்றும் 7 புத்தகங்களையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கோவை மாவட்டம் காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி முருகன் வீட்டில் நடைபெற்ற சோதனையும், ஆலந்துறை பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் வீட்டில் நடைபெற்ற என்ஐஏ சோதனையும் நிறைவடைந்துள்ளது. ரஞ்சித் குமார் வீட்டில் இருந்து ஒரு லேப்டாப், இரண்டு செல்போன், நான்கு மெமரி கார்டுகள், ஒரு சிம் கார்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

சார்ந்த செய்திகள்