பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், 10% இட ஒதுக்கீட்டிற்காக மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு சட்டத் திருத்தம் செல்லும் என்று நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பெலா திரிவேதி, பர்திவாலா ஆகியோர் தீர்ப்பளித்தனர். எனினும், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யுயு லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட் எதிராக தீர்ப்பளித்துள்ளனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன், "முன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதால் மற்ற சமூகத்தினர் பாதிக்கப்படுவர். இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புக்கான திட்டம் கிடையாது. தமிழக முதலமைச்சரைக் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பிற வகுப்பிலும் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் இருப்பதால், உயர் வகுப்பினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு தரக் கூடாது என வாதிட்டோம்.
33% உள்ள உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு தரப்படும் பட்சத்தில் 1:3 என்ற அடிப்படையில் முன்னிலை கிடைத்துவிடும். சீராய்வு மனுத் தாக்கல் செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்" எனத் தெரிவித்துள்ளார்.