திருமணத்தின் போது மணமகள், மணமகனுக்கு உறவினர்களும், நண்பர்களும் மேடையில் வைத்து மோதிரம் போடுவது, பரிசுகள் கொடுப்பது வழக்கம். ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக திருணம் செய்யும் தம்பதிகள் கிராம நீர்நிலைகளை உயர்த்த கல்யாணப் பரிசு கொடுத்து வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி, இந்த கிராமம் ஒரு முழு விவசாய கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் முப்போகம் விளைந்ததால், அந்த ஊர் விவசாயிகள் அடுத்த ஊருக்கு கூலி வேலைக்கு செல்லமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தங்களின் சொந்த நிலத்தில் பாடுபட்டு விவசாயம் செய்து வளர்ந்தனர். குழந்தைகளை வளர்த்து படிக்க வைத்தனர். அப்படியான கிராமத்தில் தான் படிப்படியாக தண்ணீர் குறைந்தது.
அதனால் விவசாயமும் குறைந்தது. கடந்த சில ஆண்டுகளாக 1500 அடிக்கு ஆழ்குழாய் கிணறு அமைத்த ஒரு சில விவசாயிகளின் நிலங்களில் மட்டும் விவசாயம் நடக்கிறது. இந்த கிராமத்தில் குடிக்க கூட தண்ணீர் இல்லை. அந்த 1500 அடி ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் குடிக்க நினைத்தால், அந்த தண்ணீரில் அமிலங்கள் கலந்து வருவதால், அதை குடிக்க முடியவில்லை. விவசாயம் செய்து படித்த இளைஞர்கள் பிழைப்புத் தேடி வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. காலம் முழுவதும் வயலில் உழைத்த விவசாயிகள் செய்வதறியாது முடங்கிக் கிடக்கிறார்கள்.
இதற்கு காரணம் தண்ணீர் இல்லை. இந்த நிலை ஏன் வந்தது? கிராமத்தில் உள்ள இளைஞர்கள் இணைந்தார்கள்.. கிராமத்தில் பல வருடங்களாக பராமரிக்கப்படாமல் உள்ள நீர்நிலைகளை மராமத்து செய்து நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வாரி குளங்களில் தண்ணீரை சேமித்தால் மட்டுமே நிலத்தடி நீரை மேலே உயர்த்த முடியும். இந்த நிலையிலும் நாம் அமைதியாக இருந்துவிட்டால், ஊரை காலி செய்துவிட்டு வெளியூர்களுக்கு செல்ல வேண்டியது தான் என்று பேசினார்கள். இதனால் "மறமடக்கி மக்கள் செயல் இயக்கம்" உருவாக்கப்பட்டது. தங்களின் சொந்த செலவில் கிராம மக்களுடன் இணைந்து முதல்கட்ட நீர்நிலை சீரமைப்பு பணிகளை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் தான் கீரமங்கலம், கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு, செரியலூர் போன்ற ஊர்களில் இளைஞர்களின் பணிக்கு நன்கொடைகள் வழங்குவதைப் போல மறமடக்கியிலும் தன்னார்வலர்கள் நன்கொடைகள் வழங்கி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று மறமடக்கியில் அன்புமணி – சுதித்ரா திருமணம் நடந்தது. மணமக்களுக்கு பலரும் பரிசுகள் வழங்கிக் கொண்டிருந்த நேரத்தில் மணமக்கள் ரூ. 5001 பணம் வைக்கப்பட்டிருந்த கவரை நீர்நிலை சீரமைக்கும் குழுவினரை அழைத்து கல்யாணப் பரிசாக கொடுத்தனர். இதேபோல் கடந்த மாதம் கொத்தமங்கலத்தில் ஒரு தம்பதி மணமேடையில் வைத்து கல்யாணப் பரிசாக நீர்நிலை சீரமைக்க நிதி கொடுத்தனர்.
தண்ணீரின் அவசியத்தை உணர்ந்த இளைஞர்கள் இப்படி கல்யாணப் பரிசுகளை மணமக்கள் கிராம வளர்ச்சிக்காக வழங்கி வருவதும், தங்கள் குழந்தைகளின் பிறந்த நாளை நீர்நிலைகளில் கொண்டாடி மரக்கன்று நட்டு நீர்நிலை சீரமைப்பிற்கு நிதி வழங்குவதும் வழக்கமாகிக் கொண்டிருக்கிறது. இந்த பழக்கத்தால் கிராமங்கள் வளர்ச்சியடையும் என்பதில் சந்தேகமில்லை. இதே போன்று ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் முயன்றால் நீர்நிலைகளை உயர்த்தலாம்.