Skip to main content

உள்ளாட்சி தேர்தல் எப்போது? தமிழக தேர்தல் ஆணையம் 7 நாட்களுக்குள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு

Published on 26/03/2018 | Edited on 26/03/2018
el

 

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் ,”2016 அக்டோபர் 24ஆம் தேதி முதல் உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளன. ஆனால் சில பல அரசியல் காரணங்களுக்காக இன்று வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தாமதம் செய்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தபோது, ஜூலை மாதம் தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படுமென மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால் தேர்தல் நடத்தப்படவில்லை. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அக்டோபரில் இரண்டு கட்டமாக தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் நடத்தப்படவில்லை.

 

இதனால் உள்ளாட்சித்துறையோடு தொடர்புடைய சாலை அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உள்ளாட்சி பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலர்களின் பதவிக்காலம் டிசம்பர்31 வரை நீட்டிக்கப்பட்டது. இதனால், தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்தும் விருப்பம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என்பது தெரியவருகிறது. இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. ஆகவே, எனது மனுவை பரிசீலித்து தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்” என கூறியுள்ளார்.

 

இதற்குமுன் இந்த மனுவை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன்,நீதிபதி ஹேமலதா அமர்வு இது குறித்து மாநில தேர்தல் ஆணையரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை  ஒத்திவைத்திருந்தனர்.

 

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.  அப்போது அரசு தரப்பில் ஆஜராக வழக்கறிஞர் நீதிமன்ற உத்தரவுபடி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு ஆய்வு நடத்தி போர்கால அடிப்படையில் தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை சமர்பித்துள்ளது. அதன் பின்பும் வார்டுகள் மறுவரையறை செய்வது குறித்து பொதுமக்களிடம் இருந்து 19 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளது என வாதிட்டார். இதனையடுத்து நீதிபதிகள் தமிழக தேர்தல் ஆணையம் 7 நாட்களுக்குள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

சார்ந்த செய்திகள்