வரும் நவம்பர் 28ந்தேதி, திருப்பத்தூர் மாவட்டம், இராணிப்பேட்டை மாவட்டம் தொடக்க விழா நடைபெறுகிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துக்கொள்கிறார். இதற்கான அழைப்பிதழை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன்அருள், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆகியோர் முதல்வரை சந்தித்து தந்து அழைப்பு விடுத்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழா, திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்திலும், இராணிப்பேட்டை மாவட்ட தொடக்கவிழா, இராணிப்பேட்டையில் உள்ள கால்நடை நோய்த்தடுப்பு மருத்துவ வளாகத்திலும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை வருவாய்த்துறை ஆணையர் ராதாகிருஷணன் வந்து ஆய்வு செய்தார். அதேப்போல் பாதுகாப்பு ஏற்பாடுகளை வடக்கு மண்டல ஐ.ஐீ நாகராஜ் ஆய்வு செய்துள்ளார்.
இந்நிலையில் புதிய மாவட்டத்துக்கான எல்லைகள் வரையரை செய்யப்பட்டுவிட்டன. அதனால் புதிய பெயர் பலகைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் திருப்பத்தூர் மாவட்ட எல்லை தொடக்கம், முடிவு, இராணிப்பேட்டை மாவட்ட எல்லை தொடக்கம், முடிவு என்கிற பெயர் பலகைகள் எழுதும் பணிகள் முடிந்துள்ளன. இந்த மாவட்ட தொடக்கவிழாவில் 145 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் முதல்வர் எடப்பாடி என்கிற செய்தியும் வெளியாகியுள்ளது.