Skip to main content

கோலாகலமாக நடைபெற்ற சிரசு திருவிழா; 13 வயது சிறுமி உட்பட 5 பேருக்கு நேர்ந்த விபரீதம்

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

vellore kudiyatham sirasu festival young child incident

 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கௌண்டன்ய மகாநதியின் கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ கெங்கையம்மன் கோயில். விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படும் பரசுராமன் தனது தாயின் தலையை வெட்டி மீண்டும் உயிர்ப்பித்த புராணக் கதையை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் வைகாசி 1-ம் தேதி அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெறும்.

 

முன்னொரு காலத்தில் விதர்ப்ப தேசத்தை ஆண்டு வந்த விஜயரத என்ற அரசன் குழந்தை வரம் வேண்டி பிரம்மனை நோக்கிக் கடும் தவமிருந்தார். அரசனின் தவத்தை மெச்சிய பிரம்மன், ரேணுகா தேவியை மகளாகப் பெற்றெடுக்கும் பாக்கியத்தை அருளினார். பிரம்மனின் அருளின்படி பிறந்த ரேணுகா தேவி சீரும் சிறப்புமாக வளர்க்கப்பட்டார். பின்னாளில், ரேணுகா தேவிக்கும் ஜமதக்னி முனிவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு விஷ்ணுவின் அம்சமான பரசுராமன் உள்ளிட்ட நான்கு மகன்கள் பிறந்தனர். வழக்கமாக அதிகாலை நேரத்தில் தாமரைக் குளத்தில் நீராடி குளக்கரை மண்ணில் குடத்தைச் செய்து அதில் தண்ணீரைப் பிடித்து வீட்டுக்கு எடுத்து வருவார் ரேணுகா தேவி.

 

அப்படி ஒரு நாள் நீராடச் சென்ற போது தாமரை குளத்தில் தேவர் குலத்தைச் சேர்ந்த அழகிய கந்தர்வனின் உருவம் தெரிந்தது. கந்தர்வனின் அழகை ரசித்த ரேணுகா தேவி ஒரு நிமிடம் அப்படியே மெய்மறந்து நின்றார். சிறிது நேரத்தில் மண்ணால் ஆன குடத்தை வழக்கம்போல செய்ய முயன்றும் முடியவில்லை. நடந்தது என்னவென்று தெரியாமல் ரேணுகா தேவி திகைத்து நின்றார். நீண்ட நேரமாகியும் மனைவி திரும்பி வராத காரணத்தை தனது ஞான திருஷ்டியால் ஜமதக்னி முனிவர் தெரிந்துகொண்டார். கந்தர்வனின் அழகில் மயங்கியதால் மண் குடத்தை செய்ய முடியாமல் நிற்கும் தனது மனைவி கற்புநெறி தவறிவிட்டார் எனக் கருதினார். தனது மகன்களை அழைத்த ஜமதக்னி முனிவர், மனைவியின் தலையைக் கொய்துவிட்டு வருமாறு கட்டளையிடுகிறார்.

 

தந்தை சொல் வேத வாக்கு. ஆனால், தாயின் பாசத்தால் மூன்று மகன்கள் மறுக்க, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று கோடாரியுடன் புறப்பட்டான் பரசுராமன். பெற்ற மகனே தன்னைக் கொல்ல வருகிறான் என்பதை தெரிந்த தாய் கலக்கத்துடன் தன்னைக் காத்துக்கொள்ள ஓடினார். நீண்ட தூரம் ஓடிய களைப்பால் இடுகாட்டு வெட்டியான் ஒருவர் வீட்டில் தஞ்சமடைந்தார். பெற்ற தாய் என்று நினைக்காமல் வெட்ட வந்த பரசுராமனைத் தடுத்தார் வெட்டியான் மனைவி. தந்தையின் கட்டளையைத் தடுக்க நினைத்த வெட்டியானின் மனைவியின் தலையை வெட்டிய பரசுராமன், பின்னர் தாயின் தலையையும் வெட்டிச் சாய்த்தான். கட்டளையை நிறைவேற்றிய பரசுராமன் தந்தை முன்னால் நின்றான். மகனின் செயலை மெச்சிய ஜமதக்னி முனிவர், என்ன வரம் வேண்டும் கேள் என்றார். தந்தையே, உங்கள் கட்டளையை நிறைவேற்றி விட்டேன். இறந்த தாய் எனக்கு வேண்டும். அவரை உயிர்ப்பித்துக் கொடுங்கள் என்றான். மகனின் ஆசையை நிறைவேற்ற புனித நீர் கொடுத்து உன் தாயை உயிர்ப்பித்துக் கொள் என்றார்.

 

தாயின் உயிர் கிடைக்கும் ஆசையில் ஓடிவந்த பரசுராமன், வெட்டியான் மனைவியின் உடலில் தனது தாயின் தலையை வைத்தும், தனது தாயின் உடலில் வெட்டியானின் மனைவியின் தலையை வைத்தும் அவசரத்தில் உயிர்ப்பித்து விட்டான். இந்த புராணக் கதையை விளக்குமாறு கெங்கையம்மன் சிரசு திருவிழாவாகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

 

குடியாத்தம் நகரை இரண்டாக பிரிக்கும் கௌண்டன்ய மகாநதியின் கரையில் கோபலாபுரம் என்ற பகுதியில் அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி 1ம் தேதி அதிகாலை தரணம்பேட்டையில் உள்ள முத்தியாலம்மன் கோயிலில் உள்ள அம்மன் சிரசு பக்தர்களின் வெள்ளத்தில் எடுத்து வரப்படும். கோபலாபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோயிலில் வெட்டியானின் மனைவி உடலில் அம்மன் சிரசு வைக்கப்பட்டு கண் திறக்கப்படும்.

 

இந்த ஒரு நாள் திருவிழாவைக் காண வேலூர் மாவட்ட மக்கள் மட்டுமில்லாமல் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். திருவிழாவைக் காண மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வார்கள். குடியாத்தம் நகரமே வித்தியாசம் இல்லாமல் திருவிழாக்கோலம் கண்டிருக்கும். கோபலாபுரம் ஊர் மக்கள் சார்பில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து தாரை தப்பட்டைகளுடன் எடுத்து வரப்படும் மாலை அம்மனுக்கு சாத்தப்படும்.  அன்று மாலை 7 மணியளவில் வெட்டியான் மனைவி உடலில் இருந்து வெட்டப்படும் சிரசு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுண்ணாம்பு பேட்டை சலவை படித்துறையில் சிரசு ஊர்வலம் நிறைவடைகிறது. மீண்டும் முத்தியாலம்மன் கோயிலில் அம்மன் சிரசு வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படும். தாயே... நீயே... துணை என கெங்கையம்மனை சரணடைந்தால் கேட்கும் வரங்களை அளிப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

 

வேண்டுதல் நிறைவேறியவர்கள் சிரசு ஊர்வலத்தின்போது வழிநெடுகிலும் சூரை தேங்காய் உடைப்பது பிரசித்தம். ஒவ்வொரு ஆண்டும் சிரசு ஊர்வலத்தில் மட்டும் சுமார் 3 டன் தேங்காய் உடைக்கப்படுகிறது. கோயிலில் மட்டும் சுமார் 5 டன் தேங்காய் பக்தர்களால் உடைக்கப்பட்டது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு அருள்பாலித்த கெங்கையம்மன் சிரசு இரவு 8 மணிக்கு கெங்கையம்மன் உடலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு ஊர்வலமாக சலவை துறைக்கு எடுத்து செல்லப்பட்டது.

 

சிரசு திருவிழாவையொட்டி கௌண்டன்ய ஆற்றில் பிரம்மாண்டமான வண்ணமயமான வான வேடிக்கைகள் நடைபெற்றது. இந்த வானவேடிக்கையை பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். விழா முடிவுக்கு வந்தது. பட்டாசு வெடித்த போது எதிர்பாராத விதமாக பட்டாசுகள் மக்கள் இருந்த பக்கம் விழுந்து வெடித்ததில் 13 வயது சிறுமி உட்பட 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. படுகாயம் அடைந்த சிறுமி மட்டும் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஒரே குடும்பத்தில் நடந்த கொடூரக் கொலை; விசாரணையில் பகீர் தகவல்

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
A incident in the same family in karnataka

கர்நாடகா மாநிலம், சைதாப்பூர் அருகே ஜோலட்டா கிராமத்தின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் இளம்பெண்ணின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சைதாப்பூர் போலீசார்,  அன்னபூரணியின் உடலை மட்டும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், யாதகிரி மாவட்டம் முனகல் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் (28). இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தாவணகெரே பகுதியைச் சேர்ந்த அன்னப்பூரணியை(25) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. 

இந்த நிலையில், நவீன் அன்னபூரணியை அடிக்கடி அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அன்னபூரணி, தனது குழந்தையுடன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனிடையே, நவீன் தனது மனைவியை சமாதானப்படுத்த அடிக்கடி அவர் வீட்டுக்குச் சென்று அழைத்து வர முயற்சித்துள்ளார். 

அதன்படி, நேற்று முன்தினம் அன்னபூரணியை அவரது பெற்றோர்களான பசவராஜப்பா (52) மற்றும் கவிதா (45) ஆகியோர் அழைத்துக் கொண்டு நவீனின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் சமாதானம் ஆன பின், அன்னபூரணியின் பெற்றோரை பஸ்ஸில் ஏற்றிவிட நவீன் தனது மனைவியுடன் காரில் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். 

காரில் சென்று அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தின் மூலம், நவீன் அன்னபூரணியின் பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நவீன், தனது காரில் வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்துக் கொண்டு மனைவி, மாமனார், மாமியார் ஆகிய மூவரையும் கொடூரமாக தாக்கியுள்ளார். மேலும் அவர், அவர்களை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். அதன் பின்னர், போலீஸுக்கு பயந்த நவீன், 3 பேரின் உடல்களையும் சைதாப்பூர் அருகே ஜோலட்டா கிராமத்தின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் தனித்தனியாக வீசிவிட்டு அங்கிருந்து தலைமறைவாயுள்ளார் என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து, காட்டுப்பகுதியில் மீதமுள்ள, கவிதா மற்றும் பசவராஜப்பா ஆகியோர் உடல்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், தலைமறைவாக இருக்கும் நவீனைப் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Former Minister MR Vijayabaskar appears in court

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

மேலும் இது தொடர்பாக மேலக்கரூர் பொறுப்பு சார்பதிவாளரும் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதே சமயம் இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். 

Former Minister MR Vijayabaskar appears in court

அதனைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி எம்.ஆர். விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனுவும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே தலைமறைவாக கேரளாவில் பதுங்கி இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தனிப்படை போலீசாரால் கடந்த 16 ஆம் தேதி (16.07.2024) கைது செய்யப்பட்டார். இத்தகைய பரபரப்பான சூழலில் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை என 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையே பிரகாஷ் வாங்கல் காவல் நிலையத்தில் ஏற்கனவே  எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 13 பேர்  மீது அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 8 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சி மத்திய சிறையில் இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று (19.07.2024) ஆஜர்படுத்தப்பட்டார்.