கோவை மாவட்டம் சவுரிபாளையம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் சோபியா. இவரது கணவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். சோபியாவின் கணவருக்குக் கிடைக்கும் வருமானத்தை வைத்துத்தான் இவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில், சோபியாவிற்கு கடந்த சில ஆண்டுகளாக தைராய்டு பிரச்சனை இருந்து வந்துள்ளது. அதனை சரிசெய்வதற்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.
அப்போது, சோபியாவிற்கு ஏற்பட்ட தைராய்டு கட்டியை அகற்றுவதற்காக மருத்துவர்கள் சோபியாவிற்கு அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால், கெடுவாய்ப்பாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாளில் இருந்து அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து சோபியாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மூச்சு விட வேண்டும் என்பதற்காக கழுத்தில் ஒரு குழாய் அமைத்தனர். ஆனால், சோபியா மூக்கு வழியாக சுவாசிக்கும் தன்மையை முழுவதுமாக இழந்துள்ளார். இதுபற்றி மருத்துவர்களிடம் கேட்டபோது, “மூச்சுக்குழாயில் உள்ள நரம்பு அறுந்துவிட்டது. இந்தப் பிரச்சனையெல்லாம் 3 மாதங்களில் சரியாகிவிடும்” என ஆறுதல் கூறியுள்ளனர். இதையடுத்து 3 வருடங்கள் ஆகியும் சோபியாவின் இந்தப் பிரச்சனை தீரவில்லை. மேலும், கழுத்தில் குழாய் அமைத்ததால் பேச முடியாமல் தவித்தும் வருகிறார்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து கோவை கலெக்டர் அலுவலகத்தில் சோபியா மனு அளித்துள்ளார். இதுகுறித்து சோபியாவின் கணவர் பேசும்போது, “நாங்க ரொம்ப கஷ்டப்படுகிற குடும்பம். என்னோட மனைவிக்கு அலட்சியமாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு மருத்துவ உதவியும் செய்யணும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.