"மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிக்கும்." என கொங்கு நாடு தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் E.R.ஈஸ்வரன் கூறியுள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"விவசாய விளைபொருட்கள் மூலம் பெரிய வியாபாரிகள் பயனடைய வேண்டுமென்ற நோக்கத்தில் மூன்று விவசாய சட்டங்கள் நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு இருக்கிறது. அந்த சட்டங்கள் இவைகள் தான், விளைவிப்பதற்கு உண்டான சட்டம். கொள்முதல் செய்வதற்கான சட்டம். கொள்முதல் செய்ததை இருப்பு வைப்பதற்கான சட்டம்.
இந்த மூன்று சட்டங்களும் இந்திய விவசாயிகளுடைய வருமானத்தை அதிகப்படுத்தி விவசாய குடும்பங்களின் வளர்ச்சியை உறுதி செய்யும் என்று மத்திய அரசு விளம்பரப்படுத்தி அதை நடைமுறைப்படுத்த முயற்சி நடக்கிறது.
உற்பத்தி சட்டம், இதுவரை குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் அமலில் இருந்தது. விவசாயிக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் குறைந்தபட்ச விலையில் அரசு கொள்முதல் செய்து கொள்ளும். சந்தையில் விலை அதிகம் இருந்தால் விவசாயி அங்கு விற்பனை செய்யலாம். விலை குறைந்தால் அரசு கொள்முதல் நிலையங்களில் கொடுத்துவிடலாம். அதனால் விவசாயிகள் வீழ்ச்சியை சந்திக்கமாட்டார்கள். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வேண்டுமென்று அரசு நினைத்திருந்தால் குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்படாத பொருட்களுக்கும் அதை நிர்ணயித்து விவசாயிகளின் நஷ்டத்தை தவிர்க்க நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கலாம். ஆனால் தற்போது தனியாரிடம் விவசாயிகள் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு தனியார் நிர்ணயிக்கின்ற விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். தனியார் பெரிய முதலாளிகள் ஒன்று சேர்ந்து கொண்டு விவசாயிகளின் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வார்கள். அவர்களுக்குள் எந்த காரணத்தைக் கொண்டும் போட்டி போட்டுக்கொண்டு விலை அதிகம் கொடுக்கமாட்டார்கள். சந்தையில் விலை அதிகமாக இருந்தாலும் ஒரு விவசாயி ஒப்பந்தம் போட்ட விலைக்குதான் விற்க வேண்டி வரும். இந்தியாவின் முழு சந்தையையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து சந்தை விலையை அவர்களுக்கு லாபம் வருகின்ற வகையில் நிர்ணயிப்பார்கள். இடைத்தரகர்களை ஒழிப்பதன் மூலமாக லாபம் வியாபாரிகளுக்கு சேருமே தவிர விவசாயிகளுக்கு சேராது.
சந்தைப்படுத்துதல் சட்டம், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச்சென்று விற்கலாம் என்று சட்டத்தின் பலனாக அரசு சொல்கிறது. ஆனால் சிறு விவசாயிகளுக்கு அது சாத்தியமில்லை. பெரிய வியாபாரிகள் தான் சந்தைப்படுத்துதலை தங்கள் கட்டுக்குள் வைத்து ஓரிடத்தில் இருக்கின்ற பொருளை இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். தமிழ்நாட்டில் ஒரு பொருளின் விலை குறைவு என்றால் அதை குறைந்த விலைக்கு வாங்கி தேவைப்படுகின்ற விலை அதிகம் கிடைக்கின்ற மற்ற மாநிலங்களில் சென்று விற்கக்கூடிய வாய்ப்பு பெரிய வியாபாரிகளுக்கு தான் கிடைக்கும். ரிலையன்ஸ் போன்று இந்தியா முழுவதும் சில்லறை வியாபார கடைகள் வைத்திருக்கின்ற நிறுவனங்களுக்கு இது பலனளிக்கும்.
அத்தியாவசிய பொருட்கள் சட்டம், அத்தியாவசிய சட்டத்தில் பாதுகாப்பு கொடுக்கப்பட்ட பொருட்களை விவசாயிகளைத் தவிர வேறு யாரும் இருப்பு வைக்க முடியாது. ஆனால் புதிய சட்டத்தின்படி அனைத்து பொருட்களும் அத்தியவசிய பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படும்போது பணம் அதிகம் வைத்திருக்கின்ற பெரிய நிறுவனங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் எந்த பொருளை வேண்டுமானாலும் இருப்பு வைத்துக் கொள்வார்கள். அதன் மூலம் எல்லா பொருட்களின் விலையும் பெரு நிறுவனங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். விவசாயிக்கு குறைந்த விலை கிடைக்கின்ற அதே நேரத்தில் நுகர்வோருக்கும் சந்தையில் அதிக விலைக்குதான் அந்தப் பொருட்கள் கிடைக்கும். இதன் மூலமாக பெருநிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டும்.
ஏற்கனவே பணமதிப்பு இழப்பு நடவடிக்கை போல, GST போல இந்த சட்ட திருத்தங்களும் மக்களுக்கு பயனளிப்பது போல அரசாங்கத்தால் சொல்லப்பட்டாலும் எதிர்வினையாற்றும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. விவசாய சட்டங்களில் மாறுதல் செய்வதற்கு முன்பாக அனைத்து மாநில அரசுகள் இடத்திலும், அந்தந்த மாநில விவசாயிகள் இடத்திலும் கருத்துகளை கேட்டு மத்திய அரசு ஆலோசித்து இருக்க வேண்டும். எப்போதும்போல அவசரகதியில் இந்த சட்டங்களை நிறைவேற்றுவதற்கு அரசு முயற்சிப்பது பெருங்கேடாக முடியும்." என கூறியுள்ளார்.