"தனது கணவரைக் கொலை செய்தவர்கள் சுதந்திரமாகப் பொதுவெளியில் நடமாடுகிறார்கள். அவர்கள் மீது புகார் கொடுத்ததும் ஒருவரை மட்டும் கைது செய்துவிட்டு மற்றவர்களைத் தப்பிக்க விட்ட காவல்துறை அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனி இருந்து என்ன பிரயோசனம்..?" எனத் தனது கைப்பட கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார் இளம்பெண் ஒருவர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் காவல்நிலைய சரகத்திற்குட்பட்டது காந்தி நகரைச் சேர்ந்த அய்யாதுரையின் மகனான விஜய். மேற்கண்ட பகுதிக்கு குடி தண்ணீர் விநியோகம் செய்யும் வாகனத்தின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவருக்கு சுதா என்கின்ற மனைவியும், லிபினேஷ் என்கின்ற மகனும், தாசிகா என்கின்ற பெண் குழந்தையும் உண்டு. இவருக்கும் இவருடைய மனைவியின் தம்பியான மயில்முருகனுக்கும் அடிக்கடி தகராறு வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 4- ஆம் தேதி விஜய் குத்திக் கொலைசெய்யப்பட்டார்.
தான் கொலை செய்ததாக மயில்முருகன் சரணடைந்த நிலையில், "தன்னுடைய கணவரை மயில்முருகன் மட்டும் கொலை செய்யவில்லை. பெருமாள் குடும்பத்தினை சேர்ந்த அஜீத்குமார், மணிகண்டன் மற்றும் செல்லத்தாய் ஆகியோருக்கும் இந்தக் கொலையில் தொடர்பு உண்டு." எனக் கூடங்குளம் காவல்நிலைய போலீசாரைச் சந்தித்துக் கூறியிருக்கின்றார். கூடங்குளம் காவல் நிலைய ஆய்வாளர் அந்தோணி ஜெகதாவும், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜூவும் ஏனோ கண்டு கொள்ளவில்லை எனக் கூறப்படுகின்றது.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சுதா, "தன்னுடைய கணவர் கொலையில் மேலும் மூன்று நபர்கள் உண்டு. காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை" என உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடங்குளம் போலீசார் சுதா எழுதி வைத்திருந்த கடிதத்தைக் கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுதாவின் இரண்டு குழந்தைகளும் பெற்றோரை இழந்து தவிப்பது கூடங்குளம் பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஆழ்த்தியுள்ளது.