நெல் இரா.ஜெயராமன் இன்று (06.12 .2018) அதிகாலை 5 மணி அளவில் சென்னை தேனாம்பேட்டை அப்பலோ மருத்துவமனையில் காலமானார்.
இன்று காலை 8.00 மணி முதல் 11 மணி வரை தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனை அருகில் ரெத்னா நகர் 23/2, 2வது தெருவில் உள்ள திருவாரூர் செந்தூர் பாரிக்கு சொந்தமான வளாகத்தில் (செந்தூர் பாரிக்கு சொந்தமான அப்பார்ட்மெண்ட்) பொதுமக்களின் அஞ்சலிக்காக நெல் ஜெயராமனின் உடல் வைக்கப்பட்டது.
அங்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ்.மணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நாகை எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், நெல்ஜெயராமனின் உடல் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டது. வேன் மூலம் அவரது சொந்த கிராமமான திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அவரது இல்லத்தில் நாளை (07.12.2018) பகல் 12.00 மணிக்கு இறுதி சடங்குகள் நடைபெறும் என தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.