வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் 25 வயதான ராஜா. எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். சிறிய அளவில் வேலைகள் எடுத்தும் செய்து வந்துள்ளார். அதேபகுதியை சேர்ந்த மற்றொரு சாதியை சேர்ந்த தீபிகாவை 2 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஒராண்டுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு பிரனீஷ் என பெயரிட்டனர்.
கடந்த மே13ம் தேதி முதல் தனது கணவர் மற்றும் குழந்தையை காணவில்லை என ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் தீபிகா மே 16ந்தேதி காலை புகார் அளித்தார். புகாரை வாங்கிய போலிஸார், உடனடியாக விசாரணையை தொடங்கினார். தீபிகாவிடம், கணவரின் நடவடிக்கை, அவரது குடும்பம், எதிரிகள் - நண்பர்கள் குறித்து தகவல்களை கேட்டனர். அப்போது, உன் கணவரின் செல்போன் எண் தா என கேட்டுள்ளனர். அவர் செல்போன் எடுத்து செல்லவில்லை, வீட்டிலேயே வைத்துவிட்டு சென்றுள்ளார் எனச்சொல்லியுள்ளார்.
நம்பரை தாம்மா அதில் ஏதாவது மிரட்டல் கால் வந்துள்ளதா என பார்க்கலாம், அப்படியே செல்போன் கொண்டு வா எனச்சொன்னபோது தயங்கியுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த போலிஸார் தீபிகாவிடம் தங்கள் பாணியில் விசாரித்தனர். விசாரணையில் அவர் கூறியதாக போலிஸ் தரப்பில் கூறப்படுவது;
கணவர் ராஜா மற்றும் ஒரு வயது குழந்தை பிரனீசை கொலை செய்து, வீட்டின் அருகே உள்ள சாத்தூர் ஏரிக்கரையில் புதைத்துவிட்டதாக தீபிகா கூறினார். புதைத்த இடம் என்று கூறி ஒரு இடத்தையும் போலீசாரிடம் காண்பித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக உடனே ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் கலைசெல்வனிடம் தகவல் கூற, அவர் வந்து விசாரணை நடத்தியுள்ளார்.
ராஜா - தீபிகா காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், ராஜா நாள்தோறும் குடித்துவிட்டுவந்து சித்திரவதை செய்ததாகவும், இதனால் வேறு வழியின்றி கொலை செய்ததாகவும் தீபிகா வாக்குமூலம் அளித்ததாக சொல்லப்படுகிறது. கணவனை கொலை செய்த பிறகு, கொலையாளியின் பிள்ளை என பாதிப்பை சந்திக்க நேரிடும் என்பதால் குழந்தையையும் கொலை செய்ததாக தீபிகா தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
கொலைக்கான காரணம் நம்பும்படியாக இருந்தாலும், கொலை எப்படி செய்தார் ?, கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதம் ?, வீடு அமைந்துள்ள பகுதிக்கும் உடல் புதைக்கப்பட்ட பகுதிக்கும் இடையே உள்ள தூரம் 1 கி.மீ. இவ்வளவு தூரம் உடலை கொண்டு சென்றது எப்படி என விசாரணை நடத்திவருகின்றனர். அதோடு, இந்த கொலையை தீபிகா மட்டும் தனியே செய்ததற்கான வாய்ப்புகள் குறைவு என கருதும் போலிஸார் அதுப்பற்றியும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
உடல்களை புதைத்ததாக தீபிகா கூறிய இடத்தில் இருந்து துர்நாற்றம் வரும் நிலையில், அங்கு தோண்டிப் பார்க்க போலீசார் முடிவுசெய்து, இதுப்பற்றி வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆற்காடு வட்டாட்சியர் சம்பவ இடத்தில் மே 17ந்தேதி காலை விசாரணை மேற்கொண்டபின், அப்பகுதியை தோண்ட அனுமதி தந்துள்ளார். காவல்துறையின் தடயவியல் வல்லுநர்கள் குழுவும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மருத்துவக் குழு வந்து பிரேதபரிசோதனை நடத்தி முடித்துள்ளனர்.